தொன்மைத் தென்னாட்டினர். "தென்னாடுடைய சிவனேபோற்றி" என அன்பால் தொழுது ஆடல் கண்டு இன்புற்று மன்னும் நன்மையர். அப்பெருமுனிவர் காண அழகிய பொன்னம்பலம் மன்னித் திருக்கூத்தியற்றியருளினன். பாதஅஞ்சலியார்: பதஞ்சலியார் என்றாயிற்று. இது சிவபெருமான் திருவடியை வணங்குபவர் என்பதாம். புலிக்காலர்: திருவடியைப் புல்லியவர் என்பதாம். இவை முன்பின்னாகத் தொக்கது. புல்லி என்பது புலியென நின்றது. அத் திருவம்பலம் காண்பார் செவ்விக்கேற்றவாறு விளக்கமுற்றருளும் திருவருளாற்றலின் வண்ணமாயது. அத் திருவருள், உருவாய் அருவாய் உருவருவாய் விளங்கிநிற்பள். சொல்லின் வரிவடிவம் கட்புலனாம் உருவமாகும். சொல்லின் ஒலிவடிவம் செவிப்புலனாம் அருவமாகும். சொல்லின் உள்ளப் பதிவு உருவருவமாகும். திருவருளும் இம் முத்திறப் பாகுபாட்டினுள் நின்று ஆருயிரை இயைந்தியக்கி அருளுகின்றனன். அத் திருவருளுக்குள் சித்தனாகிய சிவபெருமான், பேரின்பமே பெரு வடிவமாகவுள்ளவன். அருளுருவாக நின்று ஆடல்புரிகின்றனன். திருச்சிற்றம்பலம் திருவருள் உருவம் என்பதனை வரும் சேக்கிழாரடிகளின் திருமொழியான் உணர்க: "கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாம் சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி." (12. தில்லைவாழந்தணர், 2.) (அ. சி.) இருவரும் - பதஞ்சலி, வியாக்கிரமர். (29) 2745. சிவமாடச் சத்தியும் ஆடச் சகத்தில் அவமாட ஆடாத அம்பரம் ஆட நவமான தத்துவ நாதாந்த மாடச் சிவமாடும் வேதாந்த சித்தாந்தத் துள்ளே. (ப. இ.) மெய்களாகிய தத்துவங்களை இயக்கும் அத்தனாகிய (36) சிவனும் ஆடியருளுகின்றனன். அன்னையாகிய (35) சத்தியும் ஆடியருளுகின்றனள். இவ்விருவர்தம் திருக்கூத்தால் நிலவுலகத்தில் ஆருயிர்களைப் பிணிக்கும் மலமுதலிய குற்றங்களும் ஆட்டங்கண்டு அகல்வதாயின. தத்துவமாகிய மெய்களுக்கும் சுழற்சி நல்கித் தானும் சுழன்று கொண்டு நிற்கும். ஒலிமுடிவாய்த் தத்துவங்கடந்த வியத்தகு புதுமை சேர் தத்துவமும் ஆடுவதாயிற்று. கடந்த நிலையில் விளங்கும் முழுமுதற் சிவமும் ஆடியருள்வதாயிற்று. இத்திரு ஆடலினாலேயே ஏனையவும் ஆடுவதாயிற்று. இவ்வுண்மையெல்லாம் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையினுட் காணலாம். (அ. சி.) அவமாட - தீமையெலாம் ஒழிய. (30) 2746. நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னந்தமுந் தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து நாதப் பிரமஞ் சிவநட மாகுமே.
|