138
 

அந்தணன்தாள் தலைக்கூட்டும். கள்ளினையுண் போன்களி காளைகள்ளூட்டுவோன், வள்ளல் சிவ நாட்டங்கள் வாழ்த்து என்பதை உளங்கொண்டு 'சிவ சிவ' என்னும் செந்தமிழ் மறையினையே சிவானந்தத் தேறல் எனப் பருகுக. பருகுதல் - ஓவாது உணர்வின்கண் உணர்த்த உணர்தல்.

(1)

312. சித்தம் உருக்கிச் சிவமாஞ் சமாதியில்
ஒத்த சிவானந்தத் தோவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணச் சுவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்க் காலே.

(ப. இ.) மேலோதியவாறுள்ள திருவடி இன்பத்தேறலைப் பருகினோர் சித்தம் சிவன்பாலே ஓவாது உருகும் காதலினராவர். ஒன்றியிருந்து நினைத்தலால் அறிவுக்கு அறிவாய் நுண்ணிதாகவுணரும் நொசிப்பு நிலையினை எய்துவர். நொசிப்பு நிலை: சமாதி நிலை. தனக்குத் தானே ஒப்பாகிய என்றும் வற்றாத திருவடியின்பத் தேறலைத் தூய உண்மை இயற்கைத் தேறல் என்பர். இத் தூய நிலையினை உயிர்ச் செயல் அற்று உடையானை விட்டுப் பிரிவிலா உடையாள் செயலினை உற்றுத் திகழும் நிலை என்ப. இதனையே சுத்தாவத்தை என்ப. இந்நிலையில் அத் தூய மதுவுண்டலால் சிவ இன்பமே தன்பால் திகழ்ந்து தான் அதன் வண்ணமாய்த் தனக்குரிய தணவா இன்பமாம்படி அன்பினில் சிறப்பர். இந்நிலை எய்தாது தம் நிலையினை மயக்கும் புறக் கள்ளினையுண்பார் அறிவு திரிதலின் கீழ்நிலையாகிய சகல கேவல நிலையினராவர். சகல கேவலம் என்பது ஒவ்வொரு நாளும் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கலாகிய கீழ்நோக்கு நிலை. இந் நிலைபோன்று கள்ளுண் பாரும் நிற்றல் இருத்தல் கிடத்தல் செய்யினும் தம் நிலையினை இழந்து செய்தலின் அதனைக் கீழ்நிலை என்பர். இவ்வுண்மை நாயனாரருளிய:

'கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.'

- திருக்குறள், 925.

என்னும் செந்தமிழ்ப் பொதுமறையான் உணர்க. சகல கேவலம் - புணர்விற்புலம்பு; கருவிகள் தொழிற்படா நிலை.

(அ. சி.) கீழ்க்கால் - கீழால் அவத்தை.

(2)

313. காமமுங் கள்ளுங் கலதிகட்1 கேயாகும்
மாமல முஞ்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன்2 இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே

(ப. இ.) இழிகாமமும் அழிகள்ளும் தீக்குணமுடைய கலதிகளாகிய கீழோர்கட்கு உரியன. தூய வெண்ணீற்றால் யாவரையும் தூய்மையாக்கும் புனிதனாகிய சிவபெருமானின் திருவடியிணையாகிய


1. கள்வன். 8. திருத்கோத் தும்பி, 19.

2. மனிதர். அப்பர், 5. 91 - 7.