394
 

959. சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுற நாடி
ஒகார முடனே ஒருகா லுரைக்க
மகார முதல்வன் மதித்துநின் றானே.

(ப. இ.) சிவயநம என்னும் திருவைந்தெழுத்தையும் ஓமொழியுடன் ஓதுதலும் உண்டு. அங்ஙனம் ஓதுவாரையும் உலகமே உருவமாகக் கொண்டு நடத்தும் சிவபெருமான் திருவுளங்கொண்டு நிற்பன். 953-ஆம் திருப்பாட்டில் ஓம் நமசிவய என உலகியலும், இத் திருப்பாட்டில் ஓம்சிவயநம என வீட்டியலும் ஓதப் பெறுகின்றன. உலகியலை வேதநெறி யெனவும், வீட்டியலை ஆகம நெறியெனவும் கூறுவர்.

(அ. சி.) 953 - ஆம் மந்திரத்தில் நகார முதலாக உச்சரிப்பதையும், இதில் சிகார முதலாக உச்சரிப்பதையும் கூறியுள்ளார்.

(66)

960. நம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முத லுள்ளே தெளியவல் லார்கட்குத்
தம்முத லாகுஞ் சதாசிவந் தானே.

(ப. இ.) நமசிவய என்னும் திருவெழுத்து ஐந்தினால் படைத்தல் காத்தல் துடைத்தல் மறைத்தல் அருளல் என்னும் ஐந்தொழில்களும் நிகழ்வனவாம். சிவபெருமானின் சிறந்தவிரி நிலைகள் பிள்ளையார், சிவமுருகன், ஆலமர் செல்வன், அம்மை, அறிவாற்றலாம் அழற்பிழம்பு ஆகிய ஐந்து திருவுருவங்களாம். திருத் தொழிலைந்தும் சிவன்தானே செய்தும் உயிர்களைக் கொண்டு செய்வித்தும் வருதலின் அது வல்வினை என்று சொல்லப்படும் பெருஞ் செயலாகும். சிவயநம எனத் தெளிய வல்லார்க்குச் சதாசிவன் என்று சொல்லப்படும் அறிவாற்றலிணை சிவன் தம் முதலாக வெளிப்பட்டருள்வன்.

(அ. சி.) நம்...கருமங்கள் - உலகத்தில் காரியங்கள் கைகூட ந முதலாக ஓதவேண்டும். சிம்...றானே - சி முதலாக ஓதினால் முத்தியின்பம் கிட்டும்.

(67)

961. நவமுஞ் சிவமும் உயிர்பர மாகுந்
தவமொன் றிலாதன தத்துவ மாகுஞ்
சிவமொன்றி யாய்பவ ராதர வால்அச்
சிவமென்ப தானாம் எனுந்தெளி வுற்றதே.

(ப. இ.) நகர முதலாய நமய என்ற மூன்றும் நவமாகும், சிகர முதலாய சிவ என்ற இரண்டும் சிவமாகும். இப் பிரிவு இரண்டும் முறையே உயிரும் இறையுமாகும். இவ்வைந்தெழுத்துக்கள் பயனைத் தந்து கழியும் தவத்துடன் ஒப்பாவன வல்ல. நிலைபெற்ற திருவடிப் பேற்றைத் தரும் மெய்யுணர்வை நல்கும் மெய்மையன. சிவத்துடன் பொருந்தித் திருவைந்தெழுத்தின் உண்மையால் பேரன்பு பூண்டவர் சிவனே தானாகத் திகழ்வர்; (பளிக்கு மணியகத்துள்ள நூல் பளிக்கு மணியாகவே திகழும்)

(68)