(ப. இ.) ஆறாதாரத்தின் அப்பாற்பட்ட ஆதார சத்திகள் ஒன்பதும் ஒன்றுகூடி வரிசையாகத் தத்தம் இடங்களில் நிலைபெறு முறையை ஆராய்ந்து பிரைச்சதம் எட்டையும் முன்னருளிய சிவபெருமான் கோவை செய்து அமைத்தனன் என்க. நியமம் - ஏற்பாடு; அமைவு. (16) 1067 .தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற வேமத் திருளற வீசும் இளங்கொடி ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை மேவித் தமுதொடு மீண்டது காணே. (ப. இ.) மணம் கமழும் மலர்சூடிய நீண்ட கூந்தலையுடையவள். பேரருள் வாய்ந்த கண்ணையுடையவள். ஆருயிர்களின் அகஇருளைக் கடிந்தோட்டும் பேரொளிப்பிழம்பாம் இளங்கொடிக் கன்னி. அகத்தே கொப்பூழின்கண் அஞ்செழுத்தால் வளர்க்கப்படும் ஓமப் பெருஞ்சுடர். அதன் அகத்தெழும் நறுமண நுண்புகை. அத்தகைய திருவருளாற்றல் நமக்கு வேண்டும் எல்லா நலமும் மேவுவித்து அருளமுது ஊட்டிக் காத்தது என்க. வீசும் - ஓட்டும். (அ. சி.) உண்ணின்ற ஏமத்திருள் - அஞ்ஞானம். ஓமப் பெருஞ் சுடர் - நாபி. உள்ளெழு நுண்புகை - பிராணன். (17) 1068 .காணும் இருதய மந்திரமுங் கண்டு பேணு நமவென்று பேசுந் தலைமேலே வேணு நடுவு மிகநின்ற வாகுதி பூணு நடுவென்ற வந்தஞ் சிகையே. (ப. இ.) உள்ளத்தைப் பெருங்கோவிலாகக் கண்டு மனமணி இலிங்கத்தை நமசிவய என்று வழிபட்டு நடுநாடிவழியாக உயிர்ப் படக்குதலை அவியாக்கி முடிவில் கொண்டைபோல் கருதுக. மந்திரம் - திருக்கோவில். தலை - முடிவு. வேணு - நடுநாடி; சுழுமுனை. (18) 1069 .சிகைநின்ற வந்தக் கவசங்கொண் டாதிப் பகைநின்ற வங்கத்தைப் பாரென்று மாறித் தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம் வகைநின்ற யோனி வருத்தலு மாமே. (ப. இ.) முதன்மையாய் விளங்கும் கவசமாகிய காப்புச் சட்டையை ஓதி உடம்பினைக் காத்தருளென்று வேண்டுக. மீட்டும் அறிவுப் பொறியினைக் காட்டி அறிவுப்பொறி - சின்முத்திரை. பெருவிரலும் ஆள்காட்டி விரலும் ஒன்றாய்ப் பிரிப்பின்றிப் புணர்ந்தமைந்து நிற்க மற்றைய மூன்று விரல்களும் அகன்று நிற்பது. பெருவிரல், ஆண்டானாகவும் ஆள்காட்டிவிரல் அடிமையாகிய ஆருயிராகவுங்கொள்ப. நடுவிரல் வினையாகவும், ஆழிவிரல் மாயையாகவும், சிறுவிரல் ஆணவமாகவும் கொள்ப. சூலம், யோனி என்னும் இரண்டும் வருத்தலும் கூறப்படும். அறிவுப் பொறியினைக் காட்டி - காட்டுக என்பது உறுப்புத் தொடுதல். காட்டி: இகர ஈற்று வியங்கோள்.
|