1511. சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம் பவகதி பாசப் பிறவியொன் றுண்டு தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில் அவகதி மூவரும் அவ்வகை யாமே. (ப. இ.) சிவபெருமான் திருவடியிணையினைச் சேர்ப்பிக்கும் நானெறி சேர் நன்னெறியே விழுப்பேறளிக்கும் முழுத்தவ நெறியாகும். அஃதொழிந்த மற்றுள்ள நெறிகளெல்லாம் பாசம் அறாமையால் பிறப்பைத் தரும் சிறப்பிலா நெறியாகும். அவர்கட்குப் பிறவியுண்டு. தனக்குத் தானே ஒப்பாகிய நன்னெறியாம் சன்மார்க்கம் தோன்றில் அதுவே சிவத்தைப் பேணும் தவகதியாகும். விண்ணவரினும் மேலாம் அயன் அரி அரன் என்று சொல்லப்படும் மூவரும் சிவத்தைப் பேணாமையால், பிறப்புக்கு வாயிலாம் அவகதியிற் சேர்வர். 'சிவத்தைப் பேணில் தவத்திற் கழகு' என்பதுங் காண்க. (அ. சி.) தவகதி - சன்மார்க்கம் மூவரும் - மும்மூர்த்திகளும் : அயன், அரி, அரன் (9) 1512. நூறு சமயம் உளவா நுவலுங்கால் ஆறு சமயமவ் வாறுட் படுவன கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா வீறு பரநெறி யில்லா நெறியன்றே.1 (ப. இ.) சொல்லுமிடத்துச் சமயங்கள் அளவிறந்தனவாக வுள்ளன. அவ் வளவிறந்த சமயங்களும் ஆறுசமயம் கூறும் பொருள்களையே பெரும்பாலும் கூறுகின்றன. இங்ஙனம் கூறும் சமயங்களின் நெறியினைப் படிமுறை எனக் கடந்து இவற்றினும் மேலாக வுள்ளது பரநெறியாம் சிவநெறியே என்று தெளிக. அச் சிவபெருமான் திருவடியே என்றும் பொன்றா இயற்கை எழில்சேர் எல்லையில் பேரின்ப இல்லாம் புகலிட வீடுபேற்று நெறியாகும். வீறு : பிறிதொன்றற்கும் இல்லாத் தனிப்பெருமுதன்மை. (அ. சி.) நூறுசமயம் - அளவிறந்த சமயம். ஆறு சமயம் - மேலே கூறிய ஆறு சமயங்களும். அவ்வாறுள் - அளவிறந்த சமயங்களுள். வீறு பரநெறி - வலிமை மிக்க சிவநெறி. (10) 1513. கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள் சுத்த சிவனெங்குந் தோய்வுற்று நிற்கின்றான் குற்றந் தெளியார் குணங்கொண்டு கோதாட்டார்2 பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே. (ப. இ.) தவநெறி பேணாது அவநெறி திரியும் வீணர்கள் பிறர் வெறுக்கும்படியாகக் குரல் எழுப்பிக் கத்தும் கழுதையினை ஒப்பர். இயற்கை உண்மை அறிவின்ப வண்மைச் சிவபெருமான் எல்லாஇடத்தும்
1. செங்கணவன்பால் 8. திருவெம்பாவை, 17. 2. பெற்றி, 8. திருவம்மானை, 20.
|