(ப. இ.) ஆருயிர்களுக்குத் தொன்மையே ஏற்பட்ட மலத்தைப் போக்குதற்கு, மாயை வினைகளை உடன்கூட்டி அம் மலத்தைப் பறித்திட்டருள்வன். மலம் நீங்கவும் உயிர்கள் சார்புபற்றிப் பன்னெடுநாள் விருப்பம் வைத்திருந்த உடலின் விருப்பத்தை ஒழிப்பித்து, நேரடியாகத் தன் திருவடியிற் கூட்டிப் பெரும்பேறு நல்குதலால் அச் சிவம் பேரருள் நோக்கத்தையுடையது. அத்தகைய குற்றமகற்றிக் குணமருளும் உண்மைக் குரு அறிவுப் பெருவெளிச் சிவனேயாவன். (அ. சி.) பாச ...ட்டு - மாயைக் கூட்டி ஆணவமலத்தைத் தொலைத்து. கூசற்ற - அச்சமற்ற. நேசித்..வித்து - தானென விரும்பி இருந்த சரீர ஆசையை நீக்கி. நாட்டத்தது - கருத்தினையுடையது. (2) 1550. சித்திகள் எட்டொடுந் திண்சிவ மாக்கிய சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச் சத்தியும் மந்திர சாதக போதமும் பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே. (ப. இ.) அகத்தவத்தாற்கு எய்தும் எண்வகைச் சித்திகளுடன் உறுதியான சிவமாக்கிய அறுவகை வழிகளின் தூய்மையும், சிவபெருமானின் தன் வயத்தனாதல் முதலிய திருவருட் குணங்கள் எட்டும், சிவயோகத்தால் வரும் சத்தியும், மந்திரங்களைப் பயிலும் உணர்வும், பொதுநீக்கிச் சிவபெருமானே முழுமுதல் என வழிபடும் முழுமுதற் பண்பும் ஆகிய இவையனைத்தும் முழுமுதல் தலைவனாகிய சிவபெருமான் திருவருளால் கைகூடும் என்ப. (அ. சி.) சுத்தியும் - அத்துவா சோதனையும். எண்...யும் - சிவனுடைய எண்குணங்களையும் பொருந்தியதால் தூய்மையும், யோக...யும் - எண்வித யோகங்களால் அடையும் வல்லமையும். மந்திர சாதகமும் - மந்திர வல்லமையும். போதமும் - அறிவும். பத்தியும் - அடியார் பத்தியும். நாத...லும் - சிவகுரு கருணையால் நடைபெறும். (3) 1551. எல்லா வுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய் நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால் எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற் சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே.1 (ப. இ.) முப்பத்தாறு தத்துவங்களுக்கு உட்பட்ட உலகங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட சிவன், இவ் வுலகத்துத் தென்னாடுடைய சிவனேயாய்த் திகழ்கின்றனன். அவன் நல்லாராகிய சிவஞானிகள் உள்ளத்து மிக்க அருள் செய்தல்போல் ஏனையார்க்கும் செய்தற் பொருட்டுப் புறத்தே தம் முதல் குருவுமாய்த் தோன்றி யருள்வன் அதனால் எல்லாரையும் இப் பிறப்பொன்றிலேயே உய்யக் கொண்டருள்வன். அதனால் புகழமைந்த நற்குரு இயற்கைச் சிவனே. சுத்தம் - இயற்கை. (அ. சி.) எல்...லோன்-அண்டங்கள் எல்லாம் கடந்த அமலன். இப்பாலாய் - குருவடிவாய் இங்கு வந்து. உய்யக்கொண்டு - ஈடேறும்படி. (4)
1. மனத்தகத்தான். அப்பர், 6. 8 - 5. " அம்மையப்ப. திருக்களிற்றுப்படியார், 1.
|