காட்டில் வாழும்ஈன்றணிய குட்டிகளையுடைய கரடியின் வாயில்பட்ட முறையையொக்கும். (அ. சி.) ஈற்றுக்கரடி - குட்டிபோட்ட கரடி ஈன்ற என்பது விரிந்து வந்தது; குட்டிகளுடன் உள்ள கரடி மிகக் கொடுமையானதாய் இருக்கும். (10) 1616. பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங் குழக்கன்று துள்ளியக் கோணியைப் பல்காற் குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள் இழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே. (ப. இ.) நற்றவம் முதிர்ச்சியடையுமாறும், அத் தவத்தின் பயனை நுகருமாறும், இளங்கன்றொத்துத் துள்ளித் திரிகின்ற நெஞ்சினைப் பலமுறை அடக்கும் வன்மையுடையார் இனிமேற் கோணியாகிய உடம்பினுள் புகுந்தன்மையையும் உணரவல்லாராவர். அவர்க்கு மெய்ம்மை தோன்றும். இளங்கன்றாகிய பசுவின்மனத்தை யடக்கவல்லார்க்கு நெஞ்சத்திடம் உண்டாகும்; பிறப்பும் நேராது. (அ. சி.) பழுக்கின்றவாறும் - தவத்தின் முதிர்ச்சியடையும் விதமும். பழம் - தவத்தின் பயன். குழக்கன்று - பிராணவாயு. கோணி - சரீரம். கொட்டில் - புருவமத்தி. இழுக்காது - தவறாது. நெஞ்சத்திட - ஈசனை நெஞ்சில் இருத்த. ஒன்றும் - கூடும். (11) 1617. சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவால் சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால் சித்தஞ் சிவமாக வேசித்தி முத்தியாஞ் சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே.1 (ப. இ.) இடையறாது செந்தமிழ்த் திருமறையாம் 'சிவசிவ' என்னும் தனிப்பெரு மந்திரத்தை ஓதிக்கொண்டு வருவார் நெஞ்சம் சிவனுறையும் இயற்கைத் திருக்கோவிலாகும். அவ்வாறு செய்பவர் வேறு எத்தவமும் செய்யவேண்டுவதின்று. அத்தகையோர் சித்தமாகிய நெஞ்சத்திடத்துச் சிவனடிப் பேரின்பமே நிலைபெறும். அதனால் அவர் வலிந்து ஆட்கொள்ளப்படும் சிவமாகிய தேவராவர். அவருடைய நல்லுறவும் வாய்க்கும். சித்தம் சிவமாம் பெருவாழ்வும் எய்தும். அஃது எய்தவே சித்திமுத்தி என்று சொல்லப்படும் அன்பியல் வாழ்க்கை, அருளியல் வாழ்க்கை, இன்பியல் வாழ்க்கை மூன்றும் எய்தும். சித்தம் சிவமாதலே செய்தவப்பேறு. இதுவே தாடலைபோற்றாழும் தவமார் தனிப்பெருங், கூடலை வாழ்வாகுமாற்கூறு. கூடல் + ஐ = தலைவன் வந்து கூடல். (அ. சி.) செய்தவம் வேண்டாவாம் - செய்த அவம் வேண்டாவாம் எனப் பிரிக்க. மறச் செயல்களை நீக்கவேண்டும். உறவுண்டால் - சிவ ஞானிகள் இணக்கம் இருந்தால். (12)
1. வந்துமிகைசெய். 12. சண்டேசர், 59. " அவாவினை. திருக்குறள், 368. " முத்தணி. 8. திருப்பொற் சுண்ணம், 10. " புத்தன். " திருத்தோணோக்கம், 6.
|