645
 

1641. புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத் தோர்வேடம் பூண்பர் அருள்நண்ணத்
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்கள்
பின்ஞானத் தோரொன்றும் பேசகில் லார்களே.

(ப. இ.) சிற்றுணர்வுடையோர் சிவக்கோலமாகிய ஞானவேடம் பூண்டும் பயனில்லை. திருவருள் கைவரப்பெற்றோர் சிவக்கோலம் இலரெனினும் சிவஞானத்தவரேயாவர். திரிபுணர்வாகிய துன்ஞானத்தோர் தத்தஞ் சமயமே முடிந்த மெய்ச்சமயமென்றும் ஏனைய சமயங்கள் சமயங்களல்லவென்றும் இருதலையும் ஆய்வின்றி ஒருதலையாகக் கூறும் சமயக் கடும்பற்றினர் என்னும் சமயக் குற்றமுள்ளோராவர். அக் குற்றமுடையார்பால் பின்ஞானத்தோராகிய மெய்ப்புணர்ப்பின் உணர்வுடையார் ஒன்றும் உரையாடார். பின்ஞானம் - பின்னல்ஞானம். பின்னல் - ஒன்றாய் வேறாய் உடனாய்ப் பிரிவின்றி நிற்கும் புணர்ப்பு; அத்துவிதம்.

(அ. சி.) புன்ஞானம் - சிறிது ஞானம். துன்ஞானத்தோர் - பொய் ஞானம் உடையவர். சமயத் துரிசு - சமயங்களில் உள்ள குற்றம்.

(2)

1642. சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும்
அவமான சாதனம் ஆகாது தேரில்
அவமா மவர்க்கது சாதன நான்கும்
உவமான மில்பொருள் உள்ளுற லாமே.

(ப. இ.) மதிக்கத்தகாத தீயசெயல்களைத் துணையாகிய சாதன மெனக்கொண்டு நடப்போர் அரிய மக்கட்பிறப்பின் பயனை வீணாக்குகின்றனர். ஆராயின் சிவஞானிகட்கும் சிவயோகிகட்கும் அவை பொருந்தாதன. அவர்கட்குப் பொருந்திய துணை நான்காகும். அவை: சீலம், நோன்பு, செறிவு, அறிவென்பன. தனக்குவமை இல்லாதானாகிய சிவன் மேற்கூறிய நானெறியால் வழிபடுவோர் உள்ளத்து வீற்றிருந்தருள்வன்.

(அ. சி.) அவமான - பாபம் விளைக்கக்கூடிய. உவமானம் இல் பொருள் - தனக்கு உவமையில்லாதான்; சிவன். உள்ளுறலாம் - உள்ளத்திலே அடையலாம்.

(3)

1643. கத்தித் திரிவர் கழுவடி நாய்போன்று
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.

(ப. இ.) மெய்யுணர்வு இல்லாதார் கழுமரத்தடியிலுள்ள நாயினைப் போல் வீணாகக் கத்தித் திரிவர். குரங்குபோன்ற தாவும் மனமுடைய சிலர் கழுகுபோன்று பிறரைக் கொத்தித் திரிவர். சிவமெய்யுணர்வினர் பொறிகலன் முதலியன ஒத்துப் பொருந்திய உடலுடன் கூடியிருந்தும் உலகியற் செயல்களில் ஊன்றிய நாட்டமின்றி உலகச் செயலற்றுச் செத்தாரைப்போன்று திரிவர். சாதல் - தற்செயலறுதல். பிணம் பிறர்