அறிவில்லன எனினும் அவற்றினின்றும் அறிவிற்குத் துணையாம் கரணம், பூதம் இந்திரியம் எல்லாம் தோன்றுகின்றன. அவை அறிவிற்குத் துணையாய் அறிவுபோல் விளங்குவதும் திருவருள் ஆற்றலின் துணைச் செயலேயாம். இஃது எழுத்து நோக்கத் துணைசெய்யும் கண்ணாடியைச் செய்தமைப்பது போன்றதாகும். திருவருளாற்றல். வனப்பாற்றல், நடப்பாற்றல், அன்பாற்றல், அறிவாற்றல், தொழிலாற்றல் என்னும் ஐவகை யாற்றல்களாகப் பிரிந்து தெழிற்படுகின்றது. இவற்றை முறையே பராசத்தி, திரோதானசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி என்ப. இவற்றின் விரிவுகளும் அளவில்லன. இந்திரியத்தைப் புலன் எனவும் புள் எனவும் (1987) கூறுப. எனவே உலகனைத்தும் திருவருள் இயக்கத்தால் இயங்குவன. அதனால் எல்லாம் அருட் செய்கையே. (அ. சி.) அறியாத மாமாயை - மூலப் பிரகிருதி. (14) 1775. அருளே சகலமு மாய பௌதிகம் அருளே சராசர மாய அகிலம் இருளே வெளியே யெனுமெங்கும் ஈசன் அருளே சகளத்த னன்றியின் 1றாமே. (ப. இ.) அனைத்திற்கும் தாங்கும் நிலைக்களமாய்த் திருவருள் நிற்றலின் பூதகாரியமுதல் அனைத்தும் அருளேயாம். இயங்குதிணை நிலைத்திணையாகிய எல்லாவற்றின் வாழ்க்கைகளும் அருளாலேயே நிகழ்வனவாம். இருளும்வெளியுமாகிய அறியாமை அறிவுகள் தொழிற்படத் துணை நிற்பதும் அருளே. அவ் வருளே சிவபெருமானுக்குத் துணைவியாய்த் திருமேனியுமாய் நிற்கும். அதனால் அருளுருவானவன் சிவன். அருளன்றிச் சிவன் இன்று. (அ. சி.) பவுதிகம் - பூதகாரியம். சகளத்தன் - மாயையாற் றிருமேனி கொண்ட சிவபிரான். (15) 1776. சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து தவமான ஐம்முகன் ஈசன் அரனும் பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா நவமவை யாகி நடிப்பவன்2 தானே. (ப. இ.) சிவமாகிய அறிவும், சத்தியாகிய ஆற்றலும், ஒலியும், ஒளியும், அருளோனும், ஆண்டானும், அரன் அரி அயன் என்னும் மூவரும் ஆகிய ஒன்பதின்மரும் உலகுயிர் நிகழ்ச்சியின்பொருட்டு வேண்டப்படுவர். அவ் வொன்பது திருக்கோலங்களும் முழுமுதற் சிவன் ஒருவனே (1716) திருவருளாற்கொண்டு நடிப்பன். (அ. சி.) சிவத்தின் ஒன்பது அவசரங்கள் கூறப்பட்டன. (16)
1. அருளுண்டாம். சிவஞானபோதம், 5. 2 - 3. 2. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 2.
|