(ப. இ.) ஆவின் பாலுடன் கலந்த நீரினைப் பிரிக்கின்ற இயல்பு வாய்ந்த அன்னப்புள் போன்று ஒப்பில்லாத ஐவகை மன்றத்திலும், ஆருயிர் நெஞ்சத்திடத்தும் நீங்காதுறைகின்றனன் சிவன். அவன் மலங்களைப் பிரித்துத் தூய வெண்மை வாலறி வினைப்பதிவிக்கும் பொருட்டுத் தன்னந்தனியாகத் திருக்கூத்தியற்றுகின்றனன். அதனால் இருள்சேர் இருவினையையும் அதற்கீடாகிய பிறப்பினையும் தருவன். அதனால் தீமை பொருந்திய பல செயல்கள் பொருந்தின. கரணங்கள் - செயல்கள். அதனால் ஆருயிர்கட்கு ஏழுவகைப் பல்பிறப்புக்கள் எய்தும். அங்ஙனம் எய்துவிக்கும் வினைத்தொகுதி எஞ்சுவினை என்ப. எஞ்சுவினை எனினும் சஞ்சிதம் எனினும் ஒன்றே. அவ்வெஞ்சுவினை சிவகுருவின் திருக்கடைக் கண்ணோக்கத்தால் எரி சேர்ந்த வித்துப் போல் பயனற்று அழியும். (அ. சி.) தீமேவும் - தீமை பொருந்திய. எரி சேர்ந்த வித்து - மறுக்கப்பட்ட விதை. (8) 165. வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச் சுத்தத் துரியம் பிறந்து துடக்கற ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு செத்திட் டிருப்பர்1 சிவயோகி யார்களே. (ப. இ.) பிறவிக்கு வித்தாகிய ஆணவமலத்தினை அடக்கிச் செவி யறிவுறூஉவென்று சொல்லப்படும் திருவைந்தெழுத்தின் உபதேச முறைப்படி கணித்தலாகிய உருவேற்றுதலின் மிகுதியால் இயற்கை உண்மைப் பேருறக்கமாகிய சுத்தத் துரியம் பிறக்கும். பிறக்கவே பாசப்பிணிப்பாகிய தொடக்கு அறும். அத் தொடக்கறவே பொறிபுலன் கலன் உடம்பெல்லாம் முன்போலவே காணப்படினும் அவற்றுடன் தூய ஆவியும் ஒத்து உறையினும் சிவன் நினைவேயன்றி உலக நினைவு சிறிதுமில்லாதிருக்கும் அந்நிலையே நல்லாரின் நனிதிகழ் நிலையாம். இதுவே செத்திட்டிருக்கும் நிலை. இவர்களே சிவயோகியர் ஆவர். (அ. சி.) வியாக்கிரம் - உபதேசச்சொல். உடம்பொடு செத்திட்டிருப்பார் - உலகவாசனை அற்று இருப்பர். (9) 166. சிவயோக மாவது சித்தசித் தென்று தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய் அவயோகஞ் சாரா தவன்பதி போக நவயோக நந்தி நமக்களித் தானே. (ப. இ.) சிவன் நினைவாய்ச் சிவனுடன் கூடியிருக்கும் தவத்தோர் சிற்றறிவு அறிவில்லது என்று சொல்லப்பெறும் பசு பாசத் தன்மைகள் நீங்கப் பெறுவர். தவ - நீங்க, சிவயோகத்தே நிலைத்துத் தம்மறிவு சிவனறிவாய்த் திகழ்வர். பிறப்பினுக்கு வாயிலாகிய ஆணவகன்ம மாயைகள் சாரமாட்டா. அத்தகைய நற்றவத்தோர், சிவமாய் நிறையும் நிறைவினையுடையராவர். அப் பெருநிலையினை நவயோக நந்தி நமக்களித்தருளினன். சித்தசித்து - அறிவறியாமை. அவயோகம் - பிறப்பு இறப்புக்கு உட்படுதல். நவம் - புதுமை. (10)
1. நாயிற். 8. குழைத்த பத்து, 8.
|