1868. சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால் தவலோகஞ் சேர்ந்துபின் றான்வந்து கூடிச் சிவயோக ஞானத்தாற் சேர்ந்தவர் நிற்பர் புவலோகம் போற்றுநர் புண்ணியத் தோரே.1 (ப. இ.) சிவயோகியாகிய ஞானியர் உடல் சிதைந்து நீங்கினால், சிவவுலகம் சென்று பின் நிலவுலகம் வந்து பிறந்து நிறைந்த சிவயோகஞானத்தால் திருவடி சேர்ந்து நிலையின்பம் பெற்று நீடுவாழ்வர். புவஉலகம் முதலிய அனைத்துலகும் இச் சிவயோக ஞானியரைப் போற்றும். அதனால் போற்றுநர்க்குப் புண்ணியப்பேறும் உண்டாகும். (அ. சி.) தவலோகம் - ஒளி உலகம். (4) 1869. ஊனமின் ஞானிநல் யோகி யுடல்விட்டால் தானற மோனச் சமாதியுள் தங்கியே தானவ னாகும் பரகாயஞ் சாராதே ஊனமின் முத்தராய் மீளார் 2உணர்வுற்றே. (ப. இ.) குற்றமற்ற திருவடியுணர்வு பெற்ற ஞானியாதற் பொருட்டுச் சிவயோகியராகிச் செறிவுநெறி நின்றவர் உடல்விட்டால் தான் என்னும் உயிர்த் தன்மை நீங்க உரையற்ற, உலகவுணர்வற்ற, உணர்த்தும் உணர்வுடன் நிறைவுற்ற (மோன சமாதி) அருளில் தங்கித் தானவனாகுவர். வேறொர் உடற்கண் புகுதார். பழுதற்ற நல்லுயிராவர். இயற்கையும் முற்றுமாம் இன்பவுணர்வு எய்தி என்றும் மீளாதின்புறுவர். முத்தர் - நல்லுயிர்; ஞானியர். (அ. சி.) பரகாயம் - வேறு சரீரம். உணர்வுற்று - தத்துவ ஞானம் அடைந்து. (5) 1870. செத்தார் பெறும்பய னாவது ஏதெனில் செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில் செத்தா ரிருந்தார் செகத்தில் திரிமலஞ் செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே. (ப. இ.) உலகியலை மறந்தவர் செத்தார் எனப்படுவர். அவர் பெரும்பயன் யாதென்று கேட்டால், ஆணவமலம் கெட்டு பேணுபணி தொட்டு அருள் தன்மை வாய்ந்து சிவனடியைச் சேர்வது. அச் சிவனடி கூடியபின்னும் அன்னார் நிலவுலகத்திருத்தலும் கூடும். அங்ஙனமிருந்தார் மும்மலமற்ற செம்மலாயிருப்பர். அவர்கள் செம்பொருளாகிய சிவமாகவே விளங்குவர். அவர்களே சித்தர் என்று அழைக்கப்படுவோராவர். (சித்தர் நெறியே சித்தாந்த நெறி.) (அ. சி.) செத்தார் - உலகத்தை மறந்து சமாதியில் இருப்பவர். செத்து நீர் சேர்வது - அவிச்சை கெட்டுச் சிவத்தைச் சேர்வது. திரிமலம் செத்தார் - மும்மலம் கெட்டவர். (6)
1. தவஞ்செய்தார். சிவஞானபோதம். 8. 1 - 1. 2. நாமார்க்கும். அப்பர், 6. 98 - 1.
|