956
 

(ப. இ.) வேதாந்த சித்தாந்தமாகிய இருபெரும் திருநெறிகளும் சிவமாம் பெருவாழ்வை ஆருயிர்கட்கு வழங்குவனவாகும். ஏனைய நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என்று சொல்லப்படும் நான்கும் அத்துணைச் சிறப்பினவல்ல. மேலோதிய வேதாந்த சித்தாந்தம் விடுத்து ஏனைநான்கு அந்தங்களும் பெரும்பயன் விளைப்பன அல்ல. அதனால் அவற்றை அவம் என ஓதினர். எனவே வேதாந்த ஞான சித்தாந்தம் வியத்தகுமொன்று.

(அ. சி.) அவ்வவ்விரண்டும் - வேதாந்த சித்தாந்தம் ஒழிந்த ஏனைய நான்கு அந்தங்களும், நாதாந்தம் போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்.

(26)

2355. சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலாற்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர்
சித்தாந்த வேதாந்தஞ் செம்பொரு ளாதலாற்
சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் 1சிவனையே.

(ப. இ.) செம்பொருட்டுணிவாம் சித்தாந்தத்தின்கண் சீவன் முத்தியாகிய பிணிமையின்மை கைகூடும் பிணிமை இன்மை - பசுத்துவ நீக்கம். ஆதலால் சித்தாந்தச் செந்நெறியின்கண்ணே முத்தியாகிய திருவடிப்பேறு கைகூடும். கூடவே அந்நெறி நிற்பார் முத்தி சித்தித்தவராவர். சித்தாந்த வேதாந்தம் 'பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும், செம்பொருள் காண்ப தறிவு' திருக்குறள் (358) என்பதையே ஆருயிர்கட்கு விளக்கிக் காட்டுவதால் அவை செம்பொருளாகும். ஆதலின் சித்தாந்த வேதாந்தம் சிவனையே (2362) காட்டும். ஏகாரம் பிரிநிலையும் தேற்றமுமாகும். பிணிமையின்மை - செருக்கின்மை.

(அ. சி.) சீவன்முத்தி - பசுத்துவ நீக்கம்.

(27)

2356. சிவனைப் பரமனுட் சீவனுட் காட்டும்
அவமற்ற வேதாந்த சித்தாந்த மானான்
நவமுற் றவத்தையில் ஞானஞ் சிவமாந்
தவமிக் குணர்ந்தவர் தத்துவத் தாரே.

(ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமானைப் பரமன் என்று சொல்லப்படும் அருட்பெரு வெளியாம் புற அம்பலங்களிலும், சீவன் என்று சொல்லப்படும் ஆருயிர் நெஞ்சமாம் திருச்சிற்றம்பலத்தின் கண்ணும் முறையே வேதாந்தசித்தாந்தச் செந்நெறிகள் காட்டுவனவாகும். அந்நெறியின்கண் உறைத்துநிற்போனுக்கு நவமுற்ற அவத்தையாகிய அப்பால் நிலையில் இயற்கையுணர்வும் முற்றுணர்வும் இயல்பாகவே அமைந்த சிவபெருமானின் திருவடியுணர்வுண்டாகும். இத்தகைய நற்றவத்தை அருளால் மிக்குணர்ந்தோர் திருவடிமெய்யுணர்வு பெற்றோராவர். தத்துவத்தார் - திருவடி மெய்யுணர்வு பெற்றார்.

(அ. சி.) நவமுற்ற - மேம்பட்ட. அவத்தை - துரியாவத்தை. தத்துவத்தார் - மெய் உணர்ந்தவர்.

(28)


1. சித்தாந்தத். சிவஞானசித்தியார் 1 8. 2 - 6.

" குடிதழீஇக். திருக்குறள், 544.