2436. ஆவ தறியார் உயிர்பிறப் பாலுறும் ஆவ தறியும் உயிரருட் 1பாலுறும் ஆவதொன் றில்லை யகம்புறத் தென்றகன்று ஓவு சிவனுடன் ஒன்றுதன் முத்தியே. (ப. இ.) பிறப்புற்ற ஆருயிர் பிறப்பற்றுச் சிறப்புற்று வாழப்பிறந்தோம் என்பதை அறிவதே ஆவதறிவதாகும். திருவள்ளுவநாயனாரும் 'அறிவுடையார் ஆவதறிவார்' என்றருளினர். இவ்வுண்மையினை அறியார் 'மற்று நிலையாமை காணப்படும்' என்பதற்கிணங்கப் பிறப்பினையடைவர். மேலோதியவாறு ஆவதறியும் உயிர் திருவருட்பால் எய்தும். திருவருளின் வழியொழுகும் செம்பொருட்டுணிவினர்க்குப் புறமாகிய உலகத்தின்கண்ணும் அகமாகிய உடலின்கண்ணும் ஆகக்கடவனவாகிய பொருள்கள் ஏதும் இல்லையென்று நீங்குவர். அகலுதல் - நீங்குதல். அகன்று உலகங்கள் எல்லாம் கடந்து அப்பால் திகழும் சிவபெருமானுடன் ஒன்றுதலாகிய திருவடிப் பேற்றினை எய்துவர். இதுவே நிறைந்த விழுப்பேறாகும். (அ. சி.) ஓவுசிவன் - உலகம் கடந்த சிவன். (2) 2437. சிவமாகி மும்மல முக்குணஞ் செற்றுத் தவமான மும்முத்தி தத்துவத் தயிக்கியத் துவமா கியநெறி சோகமென் 2போர்க்குச் சிவமாம் அமலன் சிறந்தனன் தானே. (ப. இ.) முறையுறச் சென்று நிறைவுறு சார்பால் சிவமாகி விளங்கும் ஆருயிர் ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும், அமைதி ஆட்சி அழந்தல் என்னும் முக்குணங்களையும் அருள் நினைவால் அடக்கி, அகற்றுதல்வேண்டும். அங்ஙனம் அகற்றும் நற்றவப் பேற்றினர் மேலோதிய ஆருயிர்ப்பேறு அருட்பேறு அருளோன்பேறு ஆகிய மூன்றன்வாயிலாகத் தத்துவத் தயிக்கியச்சார்பு வெளிப்படும். தத் + துவம் + அயிக்கியம் (அசி) - அது நீ ஆகின்றாய் இந்நெறியே சோகம் என்னும் நெறியுமாகும். அது நான் என்னும் அருமறைப்பேறு ஆண்டான் அடிமை முறையை உணர்த்துவதாகும். அங்ஙனம் உறைத்து நிற்பார்குச் சிவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய நிலைமையால் அமலன் என்று அழைக்கப்படுகிறான். அவனே இயற்கை உண்மை அறிவின்ப உருவினனாகலின் சிவன் என்று அழைக்கப்படுகின்றான். அத்தகைய விழுமிய முழுமுதல் இந்நிலையில் ஆருயிர்க்கிழவனைச் சிறந்தனனாக்கிச் சிறந்தானாவன். (அ. சி.) தத்துவத் தயிக்கியத்து - தத்துவமசியால். சோகம் - அவனே நான். (3)
1. அறிவுடையார், திருக்குறள், 427. " பற்றற்ற. " 349. 2. கண்டவிவை. சிவஞானசித்தியார், 9. 3 - 1. " தன்னைச். அப்பர், 4. 106 - 1. " நெறியல்லா. 8. அச்சோப்பதிகம், 2.
|