2438. சித்தியும் முத்தியுந் திண்சிவ மாகிய சுத்தியும் முத்தீ தொலைக்குஞ் சுகானந்த சத்தியும் மேலைச் சமாதியு மாயிடும் பெத்தம் அறுத்த பெரும்பெரு 1மானன்றே. (ப. இ.) பொருளும் அருளும் போக்கில் மெய்ப்பொருளும் முறையே சித்தி, முத்தி, சிவமாம் சுத்தி என்று ஓதப்பெறும். இவை முறையே தன்னைப்பற்றி வருவன, பிறவுயிர்களைப்பற்றி வருவன, தெய்வத்தைப்பற்றி வருவனவாகிய மூவகைத் துன்பங்களையும் ஒழிப்பனவாகும். இம்மூன்றனையும் தாபத்திரயம் என்பர். ஈண்டு இவற்றை முத்தீ என்று ஓதினர். இவை தொலையவே பேரின்பப் பேரருள் உருவாம் பேரறிவாற்றல் வெளிப்படும். அதன்மேல் செயலறலாகிய சமாதியும் கைகூடும். பின்னர்ப் பிணிப்பாகிய பெத்தத்தினை அறுத்தருளிய பெரும்பெருமான் வெளிப்பட்டுத் திருவடியை நல்கிப் பேரின்புறுத்துவன். அவனே முழுமுதல். (அ. சி.) முத்தீ தொலைக்கும் - தாபத்திரயங்களை ஒழிக்கும். சத்தி - திருவருள். (4)
14. முச் சொரூபம் 2439. ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைத்து ஆறிய ஞானச் சிவோக மடைந்திட்டு வேறு மெனமுச் சொரூபத்து வீடுற்றங்கு ஈறதிற் பண்டைப் பரனுண்மை செய்யுமே. (ப. இ.) ஆருயிர்கட்கு ஆணவமலப்பிணிப்பால் வேறு நான்கு மலங்கள் அம் மலத்தை யகற்றச் சேர்க்கவேண்டியதாயிற்று. இச் சேர்க்கை அருளால் நிகழ்வது அவை முறையே கன்மம், மாயை, மாயேயம், நடப்பாற்றல் என்ப. சிவபெருமான் இவ் ஐவகை மலங்களையும் முறையே அகற்றியருள்வன். அருளவே ஆறுதலைத் தரும் சிவஞானம் மேலோங்கும் மேலோங்கவே சிவோகம் அடைவர். அடையவே பந்த பாசங்களைத் திருவருளால் வேறும் (வெல்லுதும்) என முனைவர். முனையவே ஆருயிர்ப்பேறு, அருட்பேறு, அருளோன்பேறு என்னும் முவ்வியற்கை வீடுறுவர். வீடுற்று இறுதியிற் பண்டைப் பரனுடன் கூடிப் பரனுண்மையாயிருப்பர். இஃது ஒப்பில் தலைவி ஒப்பிலாத் தலைவனை மணந்து தன்னைத் தணந்து அவனாகவே நிற்கும் அருள் நிலையை ஒத்ததாகும். தணத்தல் - மறத்தல். 2440. மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம் மூன்றினின் முப்பத் தாறு முதிப்புள மூன்றினி னுள்ளே முளைத்தெழுஞ் சோதியைக் காண்டலுங் காயக் கணக்கற்ற வாறன்றே.
1. பெரும்பெருமானென். 8. அடைக்கலப்பத்து, 3.
|