(அ. சி.) சேதனத்தாய குரு - மானிட வடிவங்கொண்ட குரு. அதில் - யோகத்தில். ஓயும் - ஒழியும். (9) பசு 1977. கற்ற பசுக்கள் கதறித் திரியினுங் கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் உற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது மற்றைப் பசுக்கள் வறள்பசுவாந் 1தானே. (ப. இ.) மெய்யுணர்வுகளைத் திருவருளுணர்வால் கற்றுள்ள ஆருயிர்கள் அச் சிவபெருமானை நாடித்திரியும். அங்ஙனம் திரிந்தாலும், வெற்றியுடன் அறிவுவிளங்கும் கட்டுயிர்கள் குறிகட்டி மேய்ந்தாலும் சிவனைப் பொருந்திய உயிரினங்கள் ஒருகுடம் நிறைபால்போன் றின்ப நிலையினை எய்தும். இவற்றையொழிந்த ஏனையுயிர்கள் அறிவின்கண் வறுமையுற்றுத் திரியும். அதனால் அறிவில் குறைந்தவுயிர்களாகவே இருக்கும். வறள் - வெறுமை; வறுமை. (அ. சி.) பசுக்கள் - மனிதர்கள். கொற்ற - மேம்பட்ட. குறி கட்டி - உருவ வழிபாடு செய்து. உற்ற - யோக நெறிப்பட்ட. (10) 1978. கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென் எல்லை கடப்பித் திறைவ னடிகூட்டி வல்லசெய் தாற்ற மதித்தபின் அல்லது கொல்லைசெய் நெஞ்சங் குறிப்பறி யாதே. (ப. இ.) ஐம்புலக் காட்டினுள் தம்புலம் அறியாது மேயும் பசுக்களாகிய ஆருயிர்களை வருமாறு செய்வதன்றி வேறென் செய்வது? திருவருள் உடனாய் நின்று உடல் கலன் உலகூண் முதலியவற்றின்கண் வைத்துள்ள பற்றின் எல்லையினைக் கடப்பித்துத் திருவடியிற்கூட்டி இன்புறுவிக்கும் அச் செயலே நல்லதாகிய வல்ல அருஞ்செயல் செய்வதாகும். அத் திருவருள் அவ்வாறு செய்தருளத் திருவுள்ளங்கொண்ட பின்புதான் பண்படா விளைநிலமாகிய ஐம்புலக் கொல்லையினை இவ்வாறு செய்யும் திருக்குறிப்பினை ஆருயிர்கள் உணர்தல்கூடும். அதற்குமுன் ஏதும் அறியா இயல்பினவாகும். (அ. சி.) கொல்லை - ஐம்புலக்காடு. வல்ல - சக்தியுள்ளதாக. (11) போதன் 1979. சீவ னெனச்சிவ னென்னவே றில்லை சீவ னார்சிவ னாரை யறிகிலர் சீவ னார்சிவ னாரை யறிந்தபின் சீவ னார்சிவ னாயிட்டிங் 2கிருப்பரே.
1. காயத்துள். திருவுந்தியார், 43. 2. பொன்வாள்முன். சிவஞானபோதம், 11. 2 - 4. " குறுவித்த. அப்பர், 4. 99 - 1. " எட்டாந். " 4. 84 - 1.
|