(ப. இ.) நனவின்கண் நனவு முதலாகச் சொல்லப்படும் ஐந்து நிலையுள் நாலாம்நிலை துரியமாகும். புணர்ப்புநிலையில் தனதுயிர் தொம்பதம் என்று நிற்குமாறு போன்று, மலந் தேய்தற்பொருட்டு வினைகூட்டப்பட்டதாதலின் வினையறவே மலமும் அற்றதென்பதே பொருள். மலமற்ற ஆருயிர் தூநிலைக்கண் நனவு முதலாகிய நிலைகளில் தனித்து நிற்கும். தானாகவே ஒப்பற்ற நிலையாய்நிற்கும் அருள் நிலையாம் பரதுரியத்தினை எய்தி அருளுடன்நிற்கும். அப்பால் நிலையில் அருளையும் அகன்று அருளோனுடன் இரண்டறப் புணர்ந்துநிற்கும். இந்நிலையில் அவ்வுயிர் தற்பதமாகத் திகழும் தற்பதம்: அது என்னும் சுட்டாய்ச் சிவபெருமானைக் குறிக்கும் குறியாய்நிற்கும். குறி - பெயர். (அ. சி.) தனைய - தானாகிய. பரதுரியம் தற்பதம் - பராவத்தையில் துரியமே தற்பதமாம். (7) 2434. தொம்பதந் தற்பதஞ் சொன்முத் துரியம்போல் நம்பிய மூன்றாந் துரியத்து நன்றாகும் அம்புவி யுன்னா அதிசூக்க மப்பாலைச் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானன்றே. (ப. இ.) மேலோதிய ஆருயிர்த்துரியம், அருட்டுரியம், அருளோன் துரியம் என்னும் முத்துரியம் பேசப்பெறும். அருளோன்துரியம் எனினும் சிவதுரியம் எனினும் ஒன்றே. இம்மூன்று நிலைகளிலும் தொம்பதமும் தற்பதமும் பேசப்பெறும். இதுபோல் மூன்றாம் துரியமாகிய சிவதுரியத்தில் நன்மை பயத்தற்கு வாயிலாகிய நிலவுலகையும் உலக நுகர்பொருள்களையும் சிறிதும் நினைத்தற்கு இடமின்றி மீநுண்மையாகிய அதிசூக்கமும் அப்பாலைச் செம்பொருளுமாய் நின்று ஆண்டருள்கின்ற பெரும்பொருள் சீர்நந்தியென்க. செம்பொருள் - மெய்ப்பொருள். (அ. சி.) மூன்றாம் துரியம் - சிவதுரியம், செம்பொருள், மெய்ப்பொருள். (8)
13. மும்முத்தி 2435. சீவன்றன் முத்தி யதீதம் பரமுத்தி ஓயுப சாந்தஞ் சிவமுத்தி யானந்த மூவயின் முச்சொருப முத்திமுப் பாலதாய் ஓவுறு தாரத்தில் உள்ளுநா தாந்தமே. (ப. இ.) ஆருயிர்ப்பேறு துரியாதீதமாகிய அப்பால் நிலையாகும். பேறு எனினும் முத்தி எனினும் ஒன்றே. அருட்பேறு என்னும் பரமுத்தி ஆவிச் செயலொழிவாய் அருட்செயல் வழியாய்நிற்கும் நிலையாகும் அருளோன்பேறாகிய சிவமுத்தி இயற்கை உண்மை அறிவு இன்பப் பெருவடிவாகும். இம்முறையான் மூவிடத்தும் முவ்வியற்கைப் பேறு முப்பாலதாகும். செயலறலாகிய ஒழிவினைத் தரும் ஓங்காரத்தின்கண் (2271) கருதப்படும் ஒலிமுடிவாம் நாதாந்தமாகும். (அ. சி.) ஓவுறுதாரம் - பிரணவம். (1)
|