(ப. இ.) உயிர்ப்பினை வீணாத்தண்டென்னும் நடுநாடி வழியாகச் செலுத்திப் பிரமரந்திரமாகிய உச்சித்தொளைக்கண் நிறுத்திய அகத்தவத்தோர்க்கு ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றுமண்டலமும் முரணின்றி ஒத்திருக்கும். இம் முறைமையினை உணர்ந்தவரே மெய்யுணர்ந்தோராவர். இவற்றை யுணராதார் ஊழ்வினை வயப்பட்டு பிண்டமாகிய உடல் பிரியப்போகிறதே என்று இறப்புக் காலத்து மிக்க துன்பம் உறுகின்றனர். (அ. சி.) தலைப்பு எய்த யோகி - சகசிர அறையை அடைந்த யோகி; மண்டலம் மூன்று - சந்திரன், சூரியன், அக்கினி. வினைப்பயன் - ஊழ், வல்வினை. பிண்டம் - தேகம். (13) 733. பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ அணங்குட னாதித்த னாறு1 விரியின் வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே. (ப. இ.) இறப்புக்காலத்துப் பெரும் துன்பம் அடைவோர் தம் வாழ்நாளை ஞாயிறு நாள்தோறும் அளந்துசெல்லும் விரிந்த வழியென்று உணராதவராவர். அவ் வுணர்வின்மையால் மதிக்கும்படி வந்த வாழ்வும் பாழாய் உடல் நாயுண்ணச் சுமந்து திரிந்த தன்மையராய் மாள்வர். (14) 734. சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான் தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற் கழல்கண்டு போம்வழி காணவல் லார்க்குக் குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே. (ப. இ.) இடையறாது ஆவிகளைப் பிறப்பு இறப்பாகிய துன்பச் சுழலிற்படுத்தும் செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணாவுவகை என்னும் ஆறுபகையாகிய குற்றங்களும் அடங்கினால் இறைவன் திருவடித்துணையைக் காண்பர். காணாதவர் தீயிடை வீழ்ந்து அழிவர். தன்னுடம்பில் பற்றுற்று நில்லாமல் திருவடி கண்டு அவ் வழியில் ஒழுகவல்லார்க்கு உயிர்ப்பு உச்சித்தொளைவழி விரும்பியபோது செலுத்தும் அருள் ஏற்படும். (அ. சி.) குழல்வழி - வீணாத்தண்டின் மேலைத்துவாரம், அஃதாவது பிரமரந்திரம். (15) 735. கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர் சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள் பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில் ஆத்தனு மாகி யலர்ந்திடு மொன்றே. (ப. இ.) சிவபெருமானது உண்மைத் தன்மைக் காட்சியால் பல நன்மைகளைக் கண்டவர் மெய்ப்பொருள் நூலாகிய சாத்திரத்தை ஓதி
1. நாளென. திருக்குறள், 334.
|