607
 

1552. தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே.

(ப. இ.) தேவனாகிய சிவபெருமானும் இயல்பாகவே பாசங்களின் நின்று நீங்கிய அடிமை ஆருயிரும் சிவகுருவாவர். இவ் விருவரும் ஒருவரே. இறை, உயிர், தளை என்று கருதிப் பேசப்பெறும் பதி, பசு, பாசம் என்ற மூன்றினுள் உன்னி உரைக்கப்படும் ஒன்றாக அவனிருப்பதுங் காண்க. அவன், கெடாத உயிராகிய பசுவினது தளையாகிய பாசத்தை அருமறை, உபதேசத்தால் மாற்றியருள்வன்; மாற்றவே திருவடிப்பேற்றின்கண் எல்லாவுயிரும் சென்று இன்புறும். அத்தகைய சிவபெருமான் மேலாம் குருபரன் ஆவன். அவன் திருவடியிணையில் முழு அன்பு புரிவாயாக. பரம் - மேல். இவ் வைந்து செய்யுட்களுள் மூன்றாவது செய்யுள் ஒழிந்த ஏனைய நான்கு செய்யுட்களிலும் முறையே சிவகுரு, சிவசற்குரு, நற்குரு குருபரன் என்னும் திருப்பெயர்கள் காணப்படுகின்றன. இவற்றால் முறையே அறிவிற் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நான்கு நெறிகளும் குறிப்பிற் புலப்படுவன காண்க. அருமறை - திருவைந் தெழுத்து உனக்கண்டு : உன்னக் கண்டு; உன்ன - கருத. உன என்பது உன்ன என்பதன் இடைக்குறை.

(அ. சி.) தேவனும் - சிவனும். உபாயத்துள் - பதார்த்தங்களுள். மூன்றாய் உனக் கண்டு - பதி, பசு, பாசம் என மூன்றாகக் கருதுவதை உணர்ந்து. மூவாப் பசு பாசம் - அழிவில்லாத ஆன்மாவின் பாசத்தை.

(5)

1553. சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்து
அத்தனை நல்கருள காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர்
அத்தன் இவனென் றடிபணி வாரே.1

(ப. இ.) இயற்கைச் சிவபெருமான் குருவாய் எழுந்தருளி வந்து ஆருயிர்களை மலமகற்றித் தூய்மை செய்தருள்வன். அக் குருவே தன் திருவடியிணையையும் நல்கியருள்வன். இவ் வுண்மையினைக் காணும் பேறில்லாத புல்லறிவாளராகிய அதிமூடர், நிலையில்லாத மாயாகாரிய மாகிய ஊனக்கண் கொண்டு கண்டு சிவகுருவும் நம்மனோரில் ஒருவரே என்பர். அருட்கண் பெற்ற புண்ணியப் பேறுடையார் அத்தனாகிய சிவபெருமான் இவனே என்று, 'காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கிச் சிவசிவ' என்று ஓவாது ஓதி அவன் திருவடியை வணங்குவர். அத்தனை: அத்+தன்னை. அங்ஙனம் செய்தருளிய தன்னை; அத்தனாகிய சிவனை. சுத்தம் - புனிதம்; இயற்கை.

(அ. சி.) பொய்...என்பர்-அருட்கண்ணால் அன்றி ஊனக்கண் கொண்டு பார்க்கும் மூடர் சிவகுருவைச் சிவமாகப் பாவிக்காது மானிடரில் ஒருவர் என்பர்.

(6)


1. நெஞ்சினைத். அப்பர், 4. 23 - 9.