(ப. இ.) கனவின் நிலைக்களமாகிய கண்டத்தைவிட்டுக் கீழிறங்கி நெஞ்சத்திடத்துத் தனியே புகுந்து உலகியற் பெருமையும் அறிவும் அழிந்து உயிர்நிற்கும். ஆங்கு அவ் வுயிர்க்கு மயக்கம் ஒன்றுமே உடன் நிற்கும். அங்கு அமைதி ஆட்சி அழுந்தல் என்னும் மூன்று குணமும் வெளிப் படாது அடங்குநிலை அவ்வியத்தம். அதனையே விரிவானது அறியாத அவ்வியத்தம் என்று ஓதப்பெற்றது. இந் நிலையே உறக்க நிலையாகும். உறக்கம் - சுழுத்தி. (அ. சி.) தானம் - கண்டத் தானம். மாலாகி - மயங்கி. அவ் வியத்தம் - மூலப்பகுதி. (14) 2117. சுழுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி கெழுமிய சித்தம் பிராணன்றன் காட்சி ஒழுகக் கமலத்தின் உள்ளேயிருந்து விழுமப் பொருளுடன் மேவிநின் 1றானே. (ப. இ.) உறக்க நிலைக்களமாகிய நெஞ்சத்தின்கண் எண்ணமும், உயிர்ப்பும், ஆளும் ஆகிய மூன்று கருவிகளும் தொழிற்படும். பேருறக்க நிலைக்களமாகிய கொப்பூழின்கண் உயிர்ப்பும் ஆளும் ஆகிய இரண்டு கருவிகள் தொழிற்படும். உயிர்ப்படங்குதலாகிய மூலத்திடத்து ஆள் மட்டும் தொழிற்படும். இங்கு ஆருயிர் ஆள் என்னும் கருவியுடன் கூடி மூலப்பகுதி என்னும் திரிபுணர்ச்சிப் பண்பை நுகர்ந்துகொண்டிருக்கும். இவ் வுண்மை அவ் வுயிர் விழித்தெழுந்தபின் இன்புறத்துயின்றேன் என மொழிவதால் உணரலாம். அவ்வியத்தமாகிய மூலப்பகுதி மாறுபாட்டுணர்வைச் செய்யுமென்னும் உண்மை வரும் சித்தியார் திருப்பாட்டா னுணர்க: "சித்தமாம் அவ்வியத்தம் சிந்தனை யதுவும் செய்யும் புத்தியவ் வியத்தில் தோன்றிப் புண்ணிய பாவம் சார்ந்து வத்துநிச் சயமும் பண்ணி வருஞ்சுக துக்க மோகப் பித்தினின் மயங்கி ஞானக் கிரியையும் பேணி நிற்கும்." (சிவஞானசித்தியார், 2. 3 - 8.) சிந்தனை - ஈண்டு ஏற்புழிக் கோடலால் திரிபுணர்வின் மேற்று. விழுமப்பொருள்: மூலப்பகுதியாகிய பெருமைப் பொருள். (அ. சி.) காட்சி - வியாபாரம். கமலம் - நாபிக்கமலம். விழுமம் மேன்மையான. (15) 2118. தானத் தெழுந்து தருக்குந் துரியத்தின் வானத் தெழுந்துபோய் வையம் பிறகிட்டுக் கானத் தெழுந்த கருத்தின் தலையிலே ஊனத் தவித்தைவிட் டூமனின் றானே. (ப. இ.) பேருறக்கமாகிய துரியத்தின்கண் ஆருயிர் எழுந்து தருக்குறும். உள்ளமானது எழுந்து உலகம் பின்னிடும்படியாக வேகமாகச் செல்லும்.
1. ஒன்றணையா. சிவஞானபோதம், 4. 3 - 1.
|