2272. சுத்த அதீதஞ் சகலத்தில் தோய்வுறில் அத்தன் அருள்நீங்கா வாங்கணிற் றானாகச் சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்து அத்தனோ டொன்றற் கருள்முத லாகுமே. (ப. இ.) தூய அப்பால்நிலை நனவில் ஆருயிர் தோய்வுற்றால் அத்தனாகிய சிவபெருமானின் திருவருள் வெளிப்பட்டுநின்று என்றும் நீங்கா என்க. அவ்விடத்து எண்ணமாகிய சித்தத்தினால் உணரப்படும் மாயா காரியப் பொருள்களிடமாக வரும் இன்பத்தை எண்ணாது உணர்வுக்கு உணர்வாய்த்திகழும் சிவபெருமான் திருவடியுணர்வில் ஒடுங்கி உணர்வதாகிய சமாதி செய்தல் வேண்டும். அச் சமாதியினால் அத்தனாகிய சிவபெருமான் திருவடியில் வேறற நின்றின்புறுதல் உண்டாகும். சிவபெருமானுடன் சேர்த்துவைப்பதற்குத் திருவருளே முதற் காரணமாம் என்க. (அ. சி.) ஆங்கணில் - அவ்விடத்தில். சித்த சுகம் - சிந்தனையால் அடையும் சுகம். அருண்முதலாமே - அருளே காரணமாகும். (8) 2273. வேறுசெய் தானிரு பாதியின் மெய்த் 1தொகை வேறுசெய் தானென்னை எங்கணும் விட்டுய்த்தான் வேறுசெய் யாவருட் கேவலத் தேவிட்டு வேறுசெய் யாவத்தன் மேவிநின் றானன்றே. (ப. இ.) சிவபெருமான் ஆருயிர்கள் ஒருவரோடொருவர் தணையாக மருவி வாழ்ந்து தன் திருவடியை அடையவேண்டுமெனத் திருவுள்ளங் கொண்டருளினன். அதன்பொருட்டுக் காவல் பூணுதலை மேற்கொள்ளும் ஆடவரையும், காதல் பேணுதலை மேற்கொள்ளும் மகளிரையும் காணுதல் கருதினன். கருதித் தான் ஆண் பெண்ணாம் இருவேறுருவில் ஒருபெரு வடிவங்கொண்டனன். அவ் வடிவமே அன்னை அத்தன் எனச் சொல்லப்படும் சத்தி சிவமாகும். அதனால் ஆருயிர்களும் ஆண் பெண் என இருவேறுருவுட்புகுந்தன. என்னையும் அங்ஙனமே செலுத்தி விடுத்தனன். தன்னினின்றும் என்னை வேறுபடுக்காது ஒன்று படச் செய்து ஒடுக்கிக்கொண்டனன். அதுவே அருட்கேவலம் எனப்படும். கேவலம் - புலம்பு; தனிமை; ஒடுக்கம். (அ. சி.) இருபாதி - ஆண் பெண் இரு பகுதியான உருவம், மங்கை பங்க உருவம். எங்கணும் விட்டுய்த்தான் - வியாபகம் உறச் செய்தான். அருட் கேவலம் - நின்மல கேவலம். வேறு செய்யா - வேற்றுமை செய்யாமல். (9)
1. சத்தியும். சிவஞானசித்தியார், 1. 3 - 41. " தோலுந். 8. திருவாசகம், திருக்கோத்தும்பி - 18. " ஒராக. 8. திருக்கோவையார். 194. " மின்றொத். 8 - 246. " அருவருக்கும். குமரகுருபரர், சிதம்பரச் - 54.
|