வுள்ளவனும் அவனே. அவன் வளர்சடைமேல் பாய்ந்தோடும் பெருவெள்ளம் மிக்க கங்கையும் உண்டு. அனைவரும் புகழும் பொன்றாப் பொருள் சேர் புகழுக்கு என்றும் உரிய முதல்வனும் அவனே. அவனைப் போற்றும் செந்தமிழ்ப் பாமாலைகளே அவன் விழையும் சிறந்த படிமக்கலமாகும். அவன் அப் பாமாலைகளை ஏற்றருளிப் பண்டைப் பழவினைப் பற்றை அறுத்தருளினன். பழவினைப் பற்றறுக்கும் பான்மையால் அவன் பதியாகிய இறைவனாவன். 'சிவயநம' என்னும் திருவைந்தெழுத்தில் காணப்படும் 'வ'கரமாகிய வனப்பாற்றல் திருவருளை நமக்கருள்பவனுமவனே. அவனை அனைத்திற்கும் அந்தமுமாவன். படிமக் கலத்துண்மை வரும் அப்பர் திருமுறையான் உணர்க: "பூம்படி மக்கலம் பொறபடி மக்கல மென்றிவற்றால் ஆம்படி மக்கல மாகிலும் ஆரூ ரினிதமர்ந்தார் தாம்படி மக்கலம்வேண்டுவ ரேல் தமிழ் மாலைகளால் நாம்படி மக்கலம் செய்து தொழுது மடநெஞ்சமே." (4. 103 - 3.) (அ. சி.) விதி - பிரமனுக்குப் பிரமனானவன். பதி - ஒளி உலகங்கள். துதியது - தோத்திரத்திற்கு உரியது. வவ்விட்டது - அருளைத் தருவது. அந்தமும் ஆம் - முடிவானதும் ஆம். (16) 2956. மேலது வானவர் கீழது மாதவர் தானிடர் மானுடர் கீழது மாதனங் கானது கூவிள மாலை கமழ்சடை ஆனது செய்யுமெம் ஆருயிர் தானன்றே. (ப. இ.) எத்தகைய வானவர்க்கும் மேலாய் அவர்களால் நத்தப் படும் அத்தனாய் விளங்குபவன் சிவன். மாதவஞ் சேர் மாதவர் மனத்தகத்தானும் அவனே. நன்னெறி நான்மை (2615) நற்றவஞ்சேர் மானிடர்தம் பிறவி இடரை நீக்கி அவர்தம் தூயவுள்ளமே கோயிலாகக் கொண்டருள்பவன் சிவன். வாராத செல்வமும் செல்வாய செல்வமுமாகத் திகழ்பவனும் அவனே. இதனையே எய்ப்பில் வைப்பென இயம்புவர். மணமிக்க கூவிளமாகிய வில்வமாலை அச் சிவபெருமானுடைய திருச்சடைக்கண் கமழாநிற்கும். அடியேன் ஆருயிர்க்கு உயிராய் எழுந்தருளி ஆவன செய்யும் தாவில் தனி முதல்வனும் அவனே. ஐந்தொழிற் றலைவனும் அவனே. 'மாதனங்கானது' என்பதனை அனங்கு மாது ஆனது என மாறி உண்மை அறிவின்ப வடிவினது என்றலும் ஒன்று. (அ. சி.) மேலது வானவர்-தேவர்களுக்கு மேலானவர். கீழது மாதவர் - தவசிகள் உள்ளத்தவர். தானிடர் மானிடர் கீழது - தான் ஆட்கொண்ட அடியார் உள்ளத்தவர். மா தனம் - பெரிய வைப்பு. கானது கூவிளம் - காட்டில் உள்ள வில்வம். செய்யும் - ஐந்தொழில் நடத்தும். உயிர் - உயிர்போன்ற சிவன் அல்லது உயிரில் இருக்கும் சிவன். (17) 2957. சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி ஆழுஞ் சுனையும் அடவியும் அங்குளன் வாழும் எழுத்தைந்து மன்னனு மாகுமே.
|