370
 

889. சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலுமேற்
சூக்கும மான வழியிடைக் காணலாஞ்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாஞ்
சூக்கும மான சிவனதா னந்தமே.

(ப. இ.) நெஞ்சகத்து வஞ்சமின்றி எண்ணத்தக்க நுண் ஐந்தெழுத்தை எண்ணினால் உம்மேலுள்ள நுண்ணுடல் வினையை நீங்கிச் செய்யலாம். மேலும் உச்சித்தொளைவழியையும் காணலாம். உணர்வுக்கு உணர்வாய்த் திகழும் சிவன் திருவடியின்பமும் சிறந்து விளங்கும்.

(அ. சி.) சூக்குமமான வழி - பிரமரந்திரம்.

(26)

890. ஆனந்தம் ஒன்றென் றறைந்திடம் ஆனந்தம்
ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ - ஓமென் றைந்திடம்
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும தாயிடம்
ஆனந்தம் அம்-ஹிரீம்- அம்-க்ஷம்-ஆம்- ஆகுமே.

(ப. இ.) அஞ்செழுத்து முறையில் ஆவி சிவனுக்கு அடிமை என்று ஓர்ந்து சிவனிறைவில் அடங்கிச் சிவனே எனும்படி நிற்பதாகிய ஒன்றென்று சொல்லப்படும் நிலை எய்தினால் திருவடிப்பேற்றின்பம் ஆகும். அதுவே ஆ, ஈ, ஊ, ஏ, ஓம் என ஐந்திடத்து வரைதலும், அம், கி (ஹி) ரீம், அம், ச(க்ஷ)ம், ஆம் என ஐந்திடத்து வரைதலும் நிலைத்த பேரின்பம்தரும் திருஅம்பலச் சக்கரத்தின் வித்தெழுத்தாகும். இப் பத்தெழுத்துமே அச் சக்கரத்துக்குரிய வித்தெழுத்தாம் என்க. வித்தெழுத்தைப் பீசாச்சரம் என்ப.

(அ. சி.) ஆனந்தம்...ஆமே - ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்ற 5 எழுத்துக்களும், அம், ஹிரீம், அம், க்ஷம், ஆம் என்ற 5 பீச அக்கரங்களும் சிதம்பரச் சக்கரத்திற்கு உரியவை.

(27)

891. மேனி யிரண்டும் விலங்காமல் மேல்கொள்ள
மேனி 1யிரண்டூடு மிக்கார் விகாரியா
மேனி யிரண்டும்-ஊ- ஆ-ஈ-ஏ-ஓ என்னும்
மேனி யிரண்டும்-ஈ- ஓ-ஊ-ஆ-ஏ - கூத்தாமே.

(ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமானின் நினைப்படையாள நீளுருவம் இருவகைப்படும். ஒன்று சொல்லுருவம்; மற்றொன்று பொருளுருவம். சொல்லுருவம் என்பது மந்திர உருவம். பொருளுருவம் என்பது திருமுகம் திருக்கை திருவடி முதலான திருவுறுப்புக்களோடு கூடிய திருவுருவம். திருவுருவங்களின் அடியில் திருச்சக்கரமாகிய மந்திரவுருவங்கள் எல்லாத் திருக்கோவில்களிலும் இன்றும் உள்ளன. அத் திருமேனி இரண்டினும் மிக்கு விளங்கித் தோன்றுவன் சிவன். அங்ஙனம் தோன்றினும் திரிபு எய்தாச் செம்பொருளாவன். திரிபு - விகாரம். நெட்டெழுத்தேழனுள் ஐ, ஒள என்னும் இரண்டெழுத்தும் நீங்கலாகிய ஐந்தெழுத்தும் வித்தெழுத்தெனப்படும். இவை இருவேறு


(பாடம்) 1. யிரண்டு மிகார விகாரியா.