அரிகரி என்றும் ஆம். நாதனுள் வட்டம் - அவ் வுள் வட்டத்தை அடுத்துள்ள வட்டம்; அதற்குரியது அசபா மந்திரம். ரேகையும் - வரைகளின் முனைகளில். சூலமே - சூலம்போன்ற குறிகள் கீறுக. (12) 906. சூலத் தலையினில் தோற்றிடுஞ் சத்தியுஞ் சூலத் தலையினிற் சூழும்ஓங் காரத்தால் சூலத் திடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து ஆலப் பதிக்கும் அடைவது வாமே. (ப. இ.) முத்தலை வேலாகிய சூலத்தின் முனையில் சிவையின் எழுத்தாகிய வகரம் அமைத்தல் வேண்டும். அச் சூலத்தைச் சூழ ஓங்காரம் அமைத்தல் வேண்டும். சூலத்தின் இடைவெளியில் திருவைந்தெழுத்து அமைத்தல் வேண்டும். அதுவே இறையாகிய சிவத்தின் நிலைக்களமாகும். இறை: பதி. ஆல் - ஆசை. (அ. சி.) சூலத்தலை - சூலத்தின் முனை. சத்தி - சத்திபீசம். சூலத்....வாமே - சூலத்தைச் சூழ ஓங்காரம் இட்டு அமைத்துச் சூல இரேகைகளுக்கு இடையிலே பஞ்சாக்கரங்களை அமைக்க என்றது. (13) 907. அதுவாம் அகார இகார உகாரம் அதுவாம் எகாரம் ஒகாரம தைந்தாம் அதுவாகுஞ் சக்கர வட்டமேல் வட்டம் பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே. (ப. இ.) முன்னைப்பாட்டில் ஓதப்பெற்ற திருவைந்தெழுத்து தமிழ்மொழியின் உயிர்க்குறிலாகிய அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தெழுத்தாகும். இவையே இங்குக் குறிக்கப்பெற்றன. இவற்றைச் சக்கர வட்டங்களிலும் மேல்வட்டங்களிலும் வரைக. நடுவாகிய நம்பெயர் 'நமசிவய' என்க. (அ. சி.) அதுவாம் - அப் பஞ்சாக்கரமாவன அ, இ உ எ ஒ. (14) 908. பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது, சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியின் நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம் ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே. (ப. இ.) திருப்பெயராகப்பெற்ற 'நமசிவய' என்பதே சிவமூல மந்திரமாகும். மற்றைய எழுத்துக்கள் உள்வட்டம் வெளிவட்டங்களில் முன்னைத் திருப்பாட்டில் கண்ட முறைபோல் திகழ்வனவாகும். (15) 909. இயலுமிம் மந்திரம் எய்தும் வழியின் செயலும் அறியத் தெளிவிக்கு நாதன் புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண் முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே.
|