திருமுறைகளை நாளும் இடையறாது ஓதிநிற்பார்க்கு அந்தம் ஆகிய பகவன் என்னும் அண்ணலோடு உறைந்து திரிபுரை ஆரருள்புரிவள். (அ. சி.) சேவகன் - வீரன். பொன்னங்கிரி - திருக்கயிலாயம். பன்னும் - கூறப்படுகின்ற. பரிபிடி - இரக்கமுள்ள. (இம் மந்திரத்தில் சிவனை "அந்தம் பகவன்" என்றும் வேறோர் இடத்தில் 'ஆதிபகவன்' என்றும் வழங்கியிருப்பதை நோக்குக). (5) 1056 .ஓதிய நந்தி உணருந் திருவருள் நீதியில் வேத நெறிவந் துரைசெய்யும் போதம் இருபத் தெழுநாள் புணர்மதி சோதி வயிரவி சூலம்வந் தாளுமே. (ப. இ.) மறைநூல் அருளால் ஓதியருளிய சிவபெருமானை அவனருளால் உணருங்கள். மறைவழியே முறை அருளினன். நாண்மீன் இருபத்தேழையும் பொருந்தும் திங்களையிடமாகக்கொண்டு அதற்கு அறிவு விளக்கியருள்வன். அம்மையாகிய வயிரவியும் தன் கையில் திகழும் முத்தலைவேலாகிய சூலத்தால் உலகனைத்தையும் காத்தருள்வள். (அ. சி.) நீதியில் - நெறிமுறையில். (6) 1057 .சூலங் கபாலங்கை ஏந்திய சூலிக்கு நாலங் கரமுள நாகபா சாங்குச மாலங் கயனறி யாத வடிவுக்கு மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே. (ப. இ.) சூலத்தையும், விண்ணோர் தலைமண்டை ஓட்டையும், ஏந்தி விளங்கும் சூலியாகிய சிவபெருமானுக்கு அழகிய திருக் கைகள் நான்குள. சூலமும் கபாலமும் தாங்கிய இரு திருக்கைகள்போக எஞ்சிய திருக்கைகள் இரண்டிலும் முறையே பாம்பாகிய கயிறும் தோட்டியும் உள்ளன. மாலும் அயனும் அளந்தறியமுடியாத அனற்பிழம்பாய்த் தோன்றிய முழுமுதற் சிவபெருமான் தன் திருவுருவின்கண் செம்பாக வடிவம் தனதாக்கொண்டு திகழும் அம்மை காத்தருள்வன். (அ. சி.) நாலங்கரமுள - நான்கு கைகள் உள. மால...மேலங்கமாய் - மாலயன் அறியாத சிவனுக்கு அங்கமாய். (இதனைத்தான் மாணிக்கவாசகர் "உடையாள் நடுவில் நீயிருத்தி") என்றார். (7) 1058 .மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை கல்லியல் ஒப்பது காணுந் திருமேனி பல்லிய லாடையும் பன்மணி தானே. (ப. இ.) இயற்கையாகவே பேரிரக்கம் வாய்ந்த மெல்லியலாவள். ஆருயிர்களின் வினைக்கீடாக வஞ்சித்தலும் தண்டித்தலும் உடையவள். எனினும் உண்மையானோக்கும் திருவடியுணர்வுசேர் கலைஞானிகள் ஓதுகின்ற முள்முருக்கம்பூ நிறம்போன்ற நிலைத்த செம்மை நிறமுடையவள்
|