(ப. இ.) மேற்கூறிய சிவச்சுடர் மண்டலத்துள்ளே விரும்பி உறைபவள் திருவருளம்மை. உயிரும் மெய்யுமாம் ஐம்பத்தோரெழுத்தும் வித்தெழுத்தைந்தும் ஆகிய ஐம்பத்தாறு எழுத்துக்களையும் இயக்கும் ஆணையளும் அவளே. அவற்றை இயக்க ஐம்பத்தாறு ஆற்றலளாயும் நிற்பவளும் அவளே. ஐம்பத்தாறு எழுத்துக்களையும் இயக்கும் ஐம்பத்தாறு இயக்கிகள் சூழ நடுவில் வீற்றிருப்பவளும் அவளே. இயக்கிகள் - அதி தேவதைகள். ஆற்றலள் - சத்தி. (அ. சி.) ஐம்பத்து அறுவகை - அக்கரங்கள் 51 - பீசம் 5-ஆக 56. ஐம்பத்து அறுவகை சூழ - 56 அக்கரதேவதைகள் சூழ. (63) 1357. சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாய் ஆங்கணி முத்தம் ஆழகிய மேனியுந் தாங்கிய கையவை தார்கிளி ஞானமாய் ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே. (ப. இ.) திருவருளம்மையை அருட்கண்ணால் நோக்குவார்க்கு அவ் அம்மை முடிதொட்டு அடிகாறும் இயற்கைப் பேரொளிப்பிழம்பாய்த் தோன்றுவள். அவள்தம் அழகிய திருமேனியும் பெருமுத்துப் போன்ற வெண்ணிறமாக இருக்கும். அம்மையின் திருக்கைகள் நான்கில் ஒன்றில் மெய்யுணர்வு அடையாளமும், மற்றொன்றில் புகல்தரு அடையாளமும், ஒன்றில் பளிங்கு மணியும், பிறிது ஒன்றில் பசுங்கிளியும் காணப்பெறும். மெய்யுணர்வு அடையாளம் - சின்முத்திரை. புகல்தரு அடையாளம் - திருவடி சுட்டுதல். இங்ஙனம் திருக்கைகள் தாங்கிநிற்றல் பேரருளாலேயாம். மாபாசம் - பேரருள். (அ. சி.) தாங்கிய கை - அன்பரை ஆதரிக்கும் அபயகரம். தார் - படிகமாலை. ஞானம் - சின்முத்திரை. (64) 1358. பாசம தாகிய வேரை யறுத்திட்டு நேசம தாக நினைத்திரும் உம்முளே நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டிற் காசினி மேலமர் கண்ணுத லாகுமே. (ப. இ.) அம்மையின் திருவருளால் பாசமாகிய பற்றுக்களனைத்தையும் அறுத்திட்டுப் பேரன்பால் திருவடியை இடையறாது நெஞ்சுளே நினைந்திரும். இப் பயிற்சி ஐந்தாண்டு நிறைவதன்முன் தீமைகளனைத்தும் தாமே அகன்றொழியும். நிலவுலகில் கண்ணுதல் திருவருள் கைவரப்பெற்று மெய்யடியாராகத் திகழ்வர். (65) 1359. கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி பண்ணுறு நாதம் பகையற நின்றிடில் விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்கார மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.
|