533
 

மேலிடமாகிய கழுத்தின்கண் வந்து தங்கும். அதனால் அக் கழுத்திடத்தை அமிழ்தக்கிணறு என்று அறைவர். இதனால் உடம்பகத்துள்ள ஞாயிற்று மண்டலம் குளிர்ச்சி எய்தும். கூபம் - கிணறு.

(அ. சி.) கூபம் - விசுத்தி.

(78)

1372. கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள
தாபத்துச் சத்தி தயங்கி வருதலால்
ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து
பாசம் அறுக்கப் பரந்தன சூலமே.1

(ப. இ.) அமிழ்தக் கிணற்றினுள் சத்தி தண்ணளி பொருந்திய பத்துத் திருமுகங்களோடு கூடியவள். அவளால் ஞாயிற்று மண்டிலத்தின் வெப்பம் வேண்டிய அளவாக விளங்குகின்றது. ஆருயிர்கட்கு இடருற்ற பொழுதெல்லாம் அவ் விடரையகற்றி நலமுறுத்தித் திடமுடன் வாழச் செய்யும் திருக்கைகள் இருபதென்ப. முத்தலை வேலாகிய சூலம் ஆவிகளது மும்மல அழுக்கை அகற்ற எங்கும் விரிந்து திகழ்கின்றது.

(அ. சி.) தாபத்துச் சத்தி - ஆதித்திய மண்டல சத்தி. ஆபத்துக் கைகள் - ஆபத்துக் காலத்தில் உதவும் கைகள்.

(79)

1373. சூலந்தண் டொள்வாள் சுடர்பறை ஞானமாய்
வேலம்பு தமருக மாகிளி விற்கொண்டு
காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.

(ப. இ.) குறித்த திருக்கைகள் இருபதன் கண்ணும் கருதத்தக்க சில கருவிகள் ஈண்டுக் கூறப்படுகின்றன. அவை வருமாறு: முத்தலை வேல், கதை, விளக்கமிக்க வாள், சிறந்த பறை, அறிவொளியாய் விளங்கும் வேல், அம்பு. உடுக்கை, ஆகிளி, வில், நீண்ட காம்பையும் அழகினையுமுடைய தாமரைப்பூ, கயிறு, மழு, கத்தி, அழகுமிக்க சங்கு, திருவடி சுட்டிக் கூட்டுவிக்கும் திருக்கையாகிய குவி கையும் என்க.

(80)

1374. எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராம்
எண்ணிய பூவித ழுள்ளே யிருந்தவள்
எண்ணிய எண்ணங் கடந்துநின் றாளே.2

(ப. இ.) விரும்பத்தகுந்த நாற்பத்து நான்கு ஆற்றல்கள் தம்மைச் சூழ வீற்றிருக்கும் அருளாற்றலர் நாற்பத்து நால்வராவர். இவர்கள் நடுவுள் கழுத்தாகிய விசுத்தியினிடமாக வீற்றிருந்தருளும் திருவருளம்மை நினைப்பைக் கடந்து நீங்காது நிற்கும் நிலையினளாவள். எண்ணம் - நினைப்பு; சங்கற்பம்.

(81)


1. அருள்பொழியும். 12. சிறுத்தொண்டர், 35.

2. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 5.