அதுபோலவும், அடுப்புப்புகை எங்கும் பரந்துசெல்லும் பான்மையுடையது. ஆனால் புகைக் கூண்டு உள்ளவிடத்தில் அப்புகை அக்கூண்டிற் கட்டுப்பட்டு மேனோக்கிப்போகும்; அதுபோலவும் உடலிற் கட்டுப்பட்டு ஒரு வழிச்செல்லும் ஆருயிர், அருளால் கட்டகன்றதும் அத் திருவருள் எங்குமாய்ச் செறிந்துநிற்பது போன்று அவ்வருளில் கலந்த அவ்வுயிரும் எங்குமாய்ச் செறிந்து நிற்கும்; அந்தமும் ஆதியும் இல்லா அரும்பெரும் சோதியாம் சிவபெருமான் அடியிணைக்கீழ் ஒடுங்கும். கல்லை : இலைக்கலம்; தொன்னை. (அ. சி.) பரமாம் உடலை - சுமையாகிய உடலை. கடையுந் தலையும் - ஆதியும் அந்தமும் இல்லாத. கரக்கும் - ஒடுங்கும். (2) 2544. செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம் அவியின் றியமன மாதிகள் ஐந்தும் குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து தவிர்வொன் றிலாத சராசரந் 1தானே. (ப. இ.) செவி, மெய், வாய், கண், மூக்கு என்று சொல்லப்படும் அறிதற்கருவியாகிய புறப்பொறிகள் ஐந்தனையும்கொண்டு விளங்கும் பருவுடல் வினைக்கீடாக அமைந்தது. அது காலக்கழிவில் அடுத்தடுத்து அழியுந் தன்மைத்து. மனம், எழுச்சி, இறுப்பு என்னும் அகப்புறக்கலன் மூன்றும், பதமுதற் புலனாகிய ஓசை, ஊறு, சுவை, ஒளி, நாற்றம் என்னும் தன்மாத்திரை ஐந்தும் ஆகிய எட்டுறுப்புக்களான் அமைந்தது நுண் உடல். இவ்வுடல் மலந்தேய்க்க அமைந்தது. அதனால் இவ்வுடல் மலத்தேய்வின்முடிவில் அழியும் தன்மைத்து. அதற்கிடையே ஊழி முடிவு நேருமாயின் அழியும். அதனால் அவ்வுடலை அழியாவுடல் என்று அறைகுவா ஆன்றோர். இவ்விருவுடலாலும் இறைவனைத் தொழுதல் வேண்டும். அதன்பொருட்டு மனம் குவிதல்வேண்டும். அங்ஙனம் குவியாமல் உலகியல் பொருள்களினிடமாக அவர்கள் மனங் கணக்கின்றித் தடுக்கமுடியாதபடி விரிகின்றது. கிடைத்தோ கிடையாமலோ வருந்துவதாற் குவிகின்றது. அதனால் அவ்வுயிர் உலகியலைக் கடக்கும் வழியறியாமல் விழிக்கின்றது. இவ்வுயிர் உயர்ந்த இயங்குதிணைப் பிறந்தும் வழியறியாமையினால் உயர்வல்லாத ஓரறிவுயிராகிற நிலைத்திணைப் பொருளோடு பேசப்படும். (அ. சி.) அவி - அவிதல், அழிதல். தவிர்வு - உலகத்தைவிட்டு நீங்கும் நெறி. (3) 2545. பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்குந் திரனெங்கு மாகிச் செறிவெங்கு மெய்தும் உரனெங்கு மாயுல குண்டு உமிழ்க்கும் வரமிங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே. (ப. இ.) முழுமுதற் சிவபெருமான் யாண்டும் நீக்கமறச் செறிந்து நின்றருள்கின்றனன். செறிவு - நிறைவு. அவன் எங்கணும் நிலைபேறாய் உயிர்க்குயிராகவும் உறைந்தருள்கின்றனன். மேலும் தான் அழிவின்றி நின்று எங்குமாய் நிலவி, காரிய அழிவு பாடாம் உலகினை ஒடுக்கிப் பின்
1. விளம்பிய. சிவஞானபோதம், 5.
|