158
 

வாலை என்பது தக்கன் மனைவியின் பெயர். இனம் பற்றி வேள்விக்கு வந்துள்ள ஏனைத் தேவ மாதரையும் குறிக்கும். வாலை - இளம் பெண். இவ்வொறுத்தல் முறை விளக்கத்தினை ஆளுடைய அடிகளருளிய திருவாசகத் திருவுந்தியாரின்கண் காண்க.

(6)

345. செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே.

(ப. இ.) செவித்தலாகிய உருவேற்றத்தக்க மந்திரத்தைச் சொல்லும் தவப்பேற்றினையுடைய தேவர், வேள்வியில் கொடுக்கும் அவிக்கு இடமாகிய அடுக்களை என்று சொல்லப்படும் குண்டத்தினை அமைத்தனர். வேள்விக்கண் செவிக்கும் வெவ்வேறு மந்திரங்கள் ஐம்புலன்களை விரியச் செய்யும் தன்மைய. அவற்றைவிடக் கணிப்பாரை அகமுகப்படுத்தி புலன்களை ஒடுக்குவித்து உயர்த்து மந்திரம் செந்தமிழ்த் திருவைந்தெழுத்து. அதுபோலாகா புலன்களை விரிவித்து நலன்களை இழப்பித்துப் பொலங்களில் உழப்பித்துத் துன்புறுத்தும் இயல்பு வாய்ந்த வேள்வியில் செவிக்கும் அக் கொடிய மந்திரங்கள். குவிமந்திரம் - மனம் ஒடுங்குதற்கு வாயிலாகிய மந்திரம். செவித்தல் - செபித்தல்.

(அ. சி.) தவி - தவ்வி; அகப்பை (சிருக்கு, சுருவம்); அவிசொரியும் பாத்திரம்.

(7)

346. நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்1
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.

(ப. இ.) நன்மை யமைந்த புதுமைமிக்க வேள்விக் குண்டம் ஒன்பதும் இடையூறின்றி யாங்கள் இயற்றி இன்புற வேண்டும். அதற்கு விடாது இடையூறிழைக்கும் முப்புரத்தாரை அகற்றி எங்களைக் காத்தருள வேண்டு மென்று மாலுள்ளிட்ட வானவர்களனைவரும் சிவபெருமானைத் தொழுது வேண்டினர். சிவபெருமானும் பொன் வில்லினால் அத் திரிபுரத்தைச் சிரித்து எரித்தனர். ஆங்குள்ள பொல்லாப் பண்பினராகிய அசுரர்கள் பொன்றினர். பொல்லாத பண்பனைத்தும் பொன்றப் புரமெரித்தார், நல்லார்க் கருள் செய்ய நாடென்பதே அதன் உள்ளுறையாகும். உள்ளுறை - தாற்பரியம். 'பெரியாரைப் பேணா தொழுகின் பெரியாரால், பேரா இடும்பை தரும், (892) என்னும் நாயனார் திருமறையும் ஈண்டு நினைவு கூர்க.

(8)

347. தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தானத் தக்கன்அவ் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யாளே.


1. வெம்மைமிகு சம்பந்தர், 1 . 131 - 4.