தீவினைகளானாகும். முன் செய்த நல்வினைப் பேற்றால் சிலவுயிர்கள் ஈண்டு இன்புறுதலைக் கண்டிருந்தும் சில அறிவிலாப் பேதைகள் அறத்தின் சிறப்பறியாராய் அதனால் தம் உள்ளத்தின்கண் பள்ளத்தை நோக்கிச் செல்லும் வெள்ளமனைய அன்பிலராய்க் கழிகின்றனர். (8) 125. கெடுவது மாவதுங் கேடில் புகழோன் நடுவல்ல செய்தின்ப நாடவும் ஒட்டான் இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம் படுவது செய்யிற் பசுவது வாமே. (ப. இ.) ஆவதும் அழிவதும் அவன் செயல் என்ப. அம்முறையால் என்றும் பொன்றா இரும்புகழையுடையவன் சிவபெருமான். அவன் அவரவர் வினைக்கீடாக ஆவதும் அழிவதும் செய்வன். அறமுறை நில்லாததுடன் கொடுமைகளை வடுவென்றும் பாராது வந்தவாறு செய்த ஒருவர்க்கு இன்பத்தினை எண்ணுவதற்கும் இடங்கொடான். அதனால் ஊணும் உடையும் பிறவும் முறையே வேண்டுவார்க்கு இடுவதும் ஈவதும் எண்ணுமின். அதுவே இன்பம். இன்பம் படுவது இன்பம் அழிவது. எனவே இன்பங் கெடவரும் துன்ப வினைகளை இயற்றினால், அவர்கள் மக்கட் பிறப்பினின்றும் தாழ்ந்து மாக்களாய், அவற்றினும் தாழ்ந்து மாவாய்ப் போவர். மாஎன்பது விலங்கு. அவ் விலங்கினுள்ளும் வீட்டினும் நாட்டினும் வாழும் நல்விலங்கன்றிக் காட்டில் வாழும் கொல் விலங்காய்க் கருதப்படுவர். அதுவே ஈண்டுப் பசுவதுவாமே என்று ஓதப்பட்டது. (அ. சி.) இடுவது - அன்னம் இடுவது. இன்பம் படுவது - துன்பம் தருவது. (9) 126. செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும் புல்லறி வாளரைப்1 போற்றிப் புலராமல் இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்2 வில்லி இலக்கெய்த விற்குறி யாமே. (ப. இ.) நிலையா வாழ்வெனும் இவ்வுலக வாழ்வின் உண்மையை அறியாமை மட்டுமல்லாமல் நிலைக்குமென்று மாறுபடக் கொள்வோர் புல்லறிவாளராவர். அத்தகையோர் சிலரையேனும் பலரையேனும் கேடுறு செல்வங் கருதிப் பாடிப் பரவிப் பணிந்து போற்றி வாடுறுதல் வேண்டா. புக்கில்லாகிய வீடுபேற்றினைக் கருதி முழுமுதற் சிவனைத் தொழுங்கள். தொழுதால் இம்மை, உம்மை, அம்மை என்னும் முத்திறச் செல்வமும் முறையாகக் கைகூடும். அதற்கு ஒப்பு சிறந்த வில்லேருழவனாகிய வில்லி (வேடன்) எய்த விற்குறி தப்பாமல் கைகூடியதென்ப. (அ. சி.) புலராமல் - வருந்தாமல். இல்லங் கருதி - முத்தி கருதி. (10)
1. நில்லாத. திருக்குறள், 331. 2. தம்மையே. ஆரூரர், 7. 34-1.
|