762
 

22. ஆதித்தநிலை
அண்டாதித்தன்

1938. செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுட ரீசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்குந் தவமே.

(ப. இ.) செஞ்சுடராகிய ஞாயிறும் அதன் ஒளியினைக்கொள்ளும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலான கோள்குளும், ஏனைய விண்மீன்களும், வானவர்களும், மேகம் தவழும் பொன் மலையாகிய பனிமலையினை நாளும் வலம்வருவர். அதன் காரணம் தங்கட்கு ஒளி சிவபெருமான்பாலிருந்து அவன் திருவாணைவழி வருதல்வேண்டும் என்னு பெருவேட்கையேயாம். அதனால் அப்பொன்மலைமேல் வெள்ளி மலைக்கண் வீற்றிருந்தருளும் சிவபெருமான் திருவடியிணையை நாளும் போற்றிவணங்குவர்.

(அ. சி.) தேவர்கள் - கோள்களும் - மீன்களும். இறைவன் இணையடி தஞ்சுடராக - இறைவன் திருவடியை வலம் வந்து வணங்குதலால் தமக்கு ஒளி உண்டாக.

(1)

1939. பகலவன் மாலவன் பல்லுயிர்க் கெல்லாம்
புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்
இகலற ஏழுல கும்முற வோங்கும்
பகலவன் பல்லுயிர்க் காதியு மாமே.1

(ப. இ.) பகலவன் சிவபெருமான்தன் இயற்கைப் பேரொளியினின்று இரவலாய்ப்பொற்று ஒளிதருகின்றனன். அப் பகலவனாகிய அண்ட ஞாயிறும், காப்போனாகிய மாலவனும், ஏனைப் பல்லுயிர்களும் என்றும் புகலிடமாய் நின்றுநிலவ விளங்குபவன் சிவபெருமான். அவனே புண்ணிய முதல்வன். ஏழுலகத்தும் எவ்வகை மாறுபாடுமின்றி அனைத்துயிரும் சிறப்புறநின்று இயற்கை உண்மை அறிவின்பப் பேரொளி தருபவன் சிவன். அவனே பேரொளிப் பகலவன் ஆவன். அவனையே சிவஞாயிறு - சிவசூரியன் எனவும் கூறுப. இச் சிவன் அனைத்துயிர்க்கும் ஆதிகாரணன் ஆவன். அச் சிவபெருமான் பகலவன்மாட்டு முனைத்துத் தோன்றுதலால் "நிலம், நீர், நெருப்பு, உயிர் (காற்று) நீள்விசும்பு, நிலாப் பகலோன்" என்ற வரிசையில் ஏழாவதாக நிற்கின்றனன். அதனால் தெய்வ வடிவங்களில் அவன் மிக்கோனாவன். அதுபற்றியே அவன் பலர் புகழ் ஞாயிறு என்று சிறப்பிக்கப்படுகின்றனன். காலை இளஞாயிறு சிவமுருகனாகவும், பகல் முக்கூறு திருமாலாகவும், மாலை ஞாயிறு வளர்சிவனாகவும் வகுத்தமைத்தனர் நந்தமிழ்ச் சான்றோர்; அதனையோர் வெண்பாவில் தருகின்றாம்.


1. எரிபொருக்குவர். அருக்கன். அப்பர், 5. 100 - 7, 8.

" அங்கதி அப்பர். 4. 41 - 8.

" காலையே. 11. காரைக், அற்புதத் - 19.