கண்காணி இல்லை என்பதே. ஆராயுமிடத்து இடத்துக்கு உரியவன் இல்லையாயின் அவ்விடமும் இல்லையாகும். மேற்பார்வையாளராகக் கலந்து எங்கும் நலம்பெற நின்றருள்வன் சிவன். அங்ஙனம் நின்றருள்பவனை நற்றவத்தால் கண்காணித்துக் கண்டவர் பொருந்தாச் செய்கை முதலிய களவொழிந்தாராவர். கண்காணி என்பது மிகப்பெரும் பழம்தமிழ்ச்சொல். (அ. சி.) கண்காணி - மேற்பார்வையாளன். (1) 2030. செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்வன் மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே.1 (ப. இ.) செழுவிய கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்து மறைத்துச் செய்யும் செயல்களைச் செய்தவன் அறிவானல்லவா? அப்படியானால் அவன் உறையும் உடலையும், உறையுளையும், உலகத்தையும், ஊண் முதலிய பிறவற்றையும் படைத்தருளி உடனாய் நின்று உணர்த்தியருளும் சிவபெருமான் எப்படி அறியாதிருப்பன்! அவன் அறியானென்று பலர் தவறு செய்கின்றனர். அவர்களனைவரும் முடிவில் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்வோராவர். பொய்யுரை புகன்றும், தீயசெய்வினை செய்தும் மிகவும் துன்புறுகின்றனர். புன்னெறிச் செல்லும் போக்கினையுடைய மனிதர்கள் அத்தகையோர் நன்னெறியொழுகி மெய்யுரை மொழிவரானால் அவர்கள் சிவனடியாராவர். அவர்களை விண்ணவரும் நண்ணித் தொழுவர். அங்ஙனம் தொழுமாறு செய்தருள்பவன் சிவன். அவன் நீலக்கதிர் சாலவீசும். மணிமிடற்று வேந்தனாம் சிவபெருமானாவன். (2) 2031. பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடு மத்தகர்க் கன்றோ மறுபிறப் புள்ளது வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும் பித்தர்கட் கென்றும் பிறப்பில்லை 2தானே. (ப. இ.) கோலமாத்திரையால் பத்தியுடையார் போன்று ஏனையார்க்கு அந் நெறிமுறைகளைப் போதித்து விலைபெற்று வாழும் வஞ்சகர் வீணாள் கழிப்பவராவர். அவரே பெருமயக்கம்கொண்ட மத்தகரும் ஆவர். அவருக்கே மறுபிறப்பும் உண்டு. பிறப்புக்கு அடிப்படையான எஞ்சுவினையை நெற்குற்றுண்பதுபோல் சிவகுருவின் திருக்கடைக்கண் நோக்கால் எரிசேர்வித்தெனச் செய்தவர் பிறப்பு விளைபுலமாம் கருப்பையினைப் பாழ்செய்தவராவர். அவரே சிவப்பித்தராவர் சிவப்பித்தராவார் திருவடியுணர்வு கைவந்தோர். அப் பித்தர்கட்கே எஞ்ஞான்றும் பிறப்பில்லை என்க. கோலம் - திருவேடம்.
1. பிணத்தினை. சிவஞானசித்தியார், 2. 4 - 24. 2. வித்தினைத். திருவுந்தியார், 28. " மறப்பித்துத். சிவஞானபோதம், 12. 2 - 1.
|