387
 

939. சேவிக்கு மந்திரஞ் செல்லுந் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே.1

(ப. இ.) தொழுகை மந்திரம் யாண்டும் கணிக்கப்படும். அம்மந்திரத்துக்கு உயிரினைப் போன்று நிற்பது ஆறு நிலைக்கள மந்திரமாகும். நெஞ்சத் தாமரைக்குள் நிலைபெறு மந்திரம் எது என்று குற்றமற ஆராயின் ஆருயிருக்கு உயிராகிய திருவைந்தெழுத்தாகும். அவை தொண்டர் அஞ்சுகளிறும் அடக்கும். அங்குசம் - தோட்டியாகும்.

(அ. சி.) பூவிக்குள் - ஆறு ஆதாரங்களாகிய பூவிற்குள். ஆவிக்கு - உயிருக்கு. அங்குசம் - ஐம்பொறிகளாகிய மதயானைகளை அடக்க அங்குசமாகும்.

(46)

940. அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகார நடுவாய்
உருவிட வூறு முறுமந் திரமே.

(ப. இ.) கண்ணுக்குப் புலனாகாத பரவெளியில் தோன்றுவது ஒலி. அவ்வொலி வெளித்தோன்றுங் கருவி துடியிடைபோன்று விரிந்தும் குவிந்தும் விரிந்தும் நிலவுவது ஒளியாகிய விந்து. இதனை உகாரம் என்ப. இவ் விந்துவை மருவிய நாதம் அகாரம் என்ப. இவ் விரண்டும் கலந்ததோற்றம் ஓங்காரம் என்ப. மந்திரங்களுட் தலையாயது நமசிவய என்ப. இதன்கண் சிகரம் நடுவாக இருப்பது காண்க.

(அ. சி.) அம்பரம் - ஆகாயம். விந்து - உகாரம். விந்து மருவிய அகாரம் - பிரணவம். சிகார நடுவாய் - நமசிவாய என்னும் தூல பஞ்சாக்கரம்.

(47)

941. ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்
ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள்
வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத் தாலே உயிர்பெற லாமே.

(ப. இ.) ஓம் நமசிவய என்பது ஆறெழுத்து மந்திரம். இம் மந்திரத்தினை நமசிவய எனவும், சிவயநம எனவும் ஓதுவர். அப்பொழுது இவ்விரண்டினையும் முறையே பருமை ஐந்தெழுத்து, நுண்மை ஐந்தெழுத்தென்பர். சிவயசிவ என்பது மீநுண்மை ஐந்தெழுத்து. சிவசிவ என்பது முதல்நிலை ஐந்தெழுத்து. முதல்நிலை: காரணம். ஓரெழுத்து - ஒப்பில்லாத சிவ என்னும் எழுத்து. இஃதிரண்டெழுத்தாயினும் உடலுயிர்போன்று ஓரெழுத்தேயாம்.


1. தொண்டரஞ்சு. சம்பந்தர், 2. 114 - 1.

" உரனென்னும். திருக்குறள், 24.