திருவுருவத்திலோ இழைத்தலாகிய பிராணப்பிரதிட்டை செய்து அருள் விளக்கம்கொண்டு அகவழிபாடு செய்க. அகவழிபாடு - தியானம். (அ. சி.) ஆசற்று - உள்ளத்தூய்மையுடன். (9) 1291. செய்ய திருமேனி செம்பட் டுடைதானுங் கையிற் படையங் குசபாசத் தோடபய மெய்யில் அணிகலன் இரத்தின மாமேனி துய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே.1 (ப. இ.) திருவருள் அம்மையின் திருமேனி செம்மைநிறம் வாய்ந்தது. பட்டுடையும் சிவப்பு நிறமே. திருக்கைகளில் தோட்டி, கயிறு, அஞ்சற்க என்னும் அடையாளம். திருமேனியின்கண் மாணிக்க அணிகள். திருமுடியும் செம்மைநிறம் வாய்ந்ததே. (10) 1292. தோற்போர்வை2 நீக்கித் துதித்தடைவிற் பூசித்துப் பாற்போ னகமந் திரத்தாற் பயின்றேத்தி நாற்பால நாரதா யாசுவா காஎன்று சீர்ப்பாகச் சேடத்தை மாற்றிப்பின் சேவியே. (ப. இ.) அரைக்குமேலுள்ள மேலாடையை நீக்கி முறையாகப் போற்றி வழிபட்டுப் பாற்சோறு (1793) அமைத்துக் குழைத்தலாகிய நிவேதனம் பண்ணி, நாற்புறத்தும் நாரதாயாசுவாகா என்று சிறப்புப் பொருந்தியன சாத்தி, எடுத்த மாலை முதலியவற்றை மாற்றிப் பின் தொழுவாயாக. தோல்: ஆகுபெயரால் உடம்பு. (அ. சி.) தோற்போர்வை - மேல் வேட்டி. பால்போனகம் பாயசம். சீர்ப்பு - சிறப்பு. (11) 1293. சேவிப் பதன்முன்னே தேவியையுத் வாகனத்தாற் பாவித் திதய கமலம் பதிவித்தங் கியாவர்க்கும் எட்டா இயந்திர ராசனை நீவைத்துச் சேமி நினைந்தது தருமே.3 (ப. இ.) முன்னே வழிபடுவதன் பொருட்டு நெஞ்சத் தாமரையினின்றும் வெளிப்படுத்தி அழைத்து இழைத்த திருவருளம்மையை மீண்டும் நெஞ்சத் தாமரையுள் நுழைத்தலாகிய உத்வாகனம் செய்து, அன்புடன் நினைந்து நெஞ்சகத்தே இழைத்தலாகிய பதிவித்தலைச் செய்து, எத்தகையார்க்கும் அடையமுடியாத இந்திரராசனாகிய புவனாபதி சக்கரத்தை நீ ஓம்பிவைத்து வழிபட்டு வருவாயாக. அச் சக்கரம் நீ கருதிய அனைத்தும் கைகூடச் செய்யும். இயந்திரம் - சக்கரம். (அ. சி.) உத்வாகனத்தால் - இதயத்தில் ஒடுக்குவதால். இயந்திர இராசன் - புவனாபதியை. (12)
1. மின்தொத்திடு. திருக்கோவையார், 246. 2. தோற்போர்வை. நாலடியார், 42. 3. மண்முதல். சிவஞானபோதம், 9. 3-3.
|