15. சாரூபம் (சிவனுருவாதல்) 1484. தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந் தங்குஞ் சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர் இங்கிவ ராக விழிவற்ற யோகமே. (ப. இ.) எண்வகை உறுப்புக்களானமைந்த சிவயோக நெறியான் எய்துவது சிவவுருவம். இந்நிலையும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என வழங்கப்பெறும் நன்னெறியாகிய சன்மாக்கத்தினன்றிக் கிடையாது. அச் சிவயோகர் உடல் உறுப்புக்களோடு கூடியிருப்பினும் சித்திப்பயிற்சி பெற்றவராவர். (அ. சி.) யோகமார்க்கத்தால் சாரூபம் கிட்டும் என்றது இம் மந்திரம். அங்கத்துடல் - உறுப்புக்கள் அமைந்த உடல். (1) 1485. சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே சயிலம தாகுஞ் சராசரம் போலப் பயிலுங் குருவின் பதிபுக்க போதே கயிலை இறைவன் கதிர்வடி வாமே.1 (ப. இ.) உலகத்து ஒப்பில் ஒருமலை என்று சொல்லப்படும் பொன் மலையினைச் சார்ந்த இயங்குதிணையும் நிலைத்திணையுமாகிய பொருள்களெல்லாம் அப் பொன்வண்ணமாதல்போல் சிவகுரு வீற்றிருக்கும் திருவூர் புகுந்தபோதே கயிலைமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் இயற்கை அறிவொளி வடிவமாவன் மெய்கண்டானாகிய மாணவன். சயிலலோகம்: லோகசயிலம். சயிலம் - மலை. சயிலாதி : மலைகளுள் முதன்மையான கைலைமலை. (அ. சி.) சயிலலோகம் - சிலை, சைலம், சயிலம் அஃதாவது மேரு "மேருவைச் சார்ந்த காகமும் பொன்னாம்" என்னும் பழமொழிப்படி "சயிலமதாகும் சராசரம் போல" என்றார். (2)
சாயுச்சியம் (சிவனாதல்) 1486. சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல் சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீவுதல் சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே.2
1. படியில். 12. வெள்ளானை. 2. " சுருக்கமில். யாப்பருங்கலக்காரிகை. 3. 2. கந்தமலர்க். அப்பர். 6. 84 - 4. "முத்திநெறி. 8. அச்சோப்பதிகம். 1.
|