507
 

13. நவாக்கரி சக்கரம்

1294. நவாக்கரி சக்கர நானுரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி யக்கிலீ சௌமுத லீறே.

(ப. இ.) வியத்தகு தன்மை வாய்ந்த 'வ' கரமென்னும் ஓரெழுத்துக்குரியவள் திருவருளம்மை அவளுக்குரிய நவாக்கரி சக்கரத்தை யான் ஓதப் புகுந்தால் அந் நவாக்கரி எண்பது வகையாக எழுத்து மாறுதலால் காணப்படும். நவாக்கரி எழுத்து முதற்கண் கிலீம் என்பதும் முடிவில் 'சௌ' என்பதும் ஆகும்.

(அ. சி.) நவாக்கரி - புதுமையான அக்கரி. நவாக்கரியாக நவாக்கரி சக்கரமாக. அ. கிலி - சௌ - முதல் ஈறே அந்தக் கிலீம் முதல் சௌ ஈறாக.

(1)

1295. சௌமுதல் அவ்வொடு ஹௌவுட னாங்கிரீம்
கௌவு ளுமையுளுங் கலந்திரீம் சிரீமென்
றொவ்வில் எழுங்கிலீ மந்திர பாதமாச்
செவ்வுள் எழுந்து சிவாய நமவென்னே.

(ப. இ.) முதற்கண் சௌ, ஒள, ஹௌ, கிரீம், கௌ, ஐ, இரீம், சிரீம், கிலீம் ஆகிய இவை ஒன்பதும் மந்திர உறுப்பாகக் கொண்டு செம்மையாக உள்ளெழுந்த முறையில் 'சிவயநம' எனக் கணிப்பாயாக. ஆதிமந்திரம் அஞ்செழுத்தென்பதும் அதனையுயிராகவும் ஏனைய மந்திரங்களை உடலுறுப்புக்களாகவும் கொண்டு வழிபடுக.

(அ. சி.) சௌ...பாதமா - சௌ - ஒள - ஹௌ - கிரீம் - கௌ ஐ - இரீம் - சிரீம் - கிலீம் என்பன மந்திர உறுப்புக்களாக. செவ்வுள் - செவ்வையாக.

(2)

1296. நவாக்கரி யாவது நானறி வித்தை
நவாக்கரி யுள்ளெழும் நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திர நாவுளே ஓத
நவாக்கரி சத்தி நலந்தருந் தானே.

(ப. இ.) நவாக்கரி என்று சொல்லப்படும் மந்திரமே யானறியும் மெய்யுணர்வுக் கலையாகும். அதனால் நன்மைகளெல்லாம் அகத்தே தோன்றும். அம் மந்திரத்தினை வாய்திறந்து ஒலியாது நாப் புடைபெயரும் மாத்திரையான் ஒலித்துக் கணிக்க. அங்ஙனம் கணிக்கவே அதற்குரிய திருவருளாற்றலள் எல்லாநலமும் தந்தருளுவள்.

(அ. சி.) நாவுளே ஓத - வாய்திறந்து உச்சரியாது நா புடை பெயரும் அளவில் உச்சரிக்க.

(3)