1091
 

2652. வாயொடு கண்டம் இதய மருவுந்தி
ஆய இலிங்க மவற்றின்மேலே யவ்வாய்த்
தூயதோர் துண்ட மிருமத் தகஞ்செல்லல்
ஆயதீ றாமைந்தோ டாமெழுத் தஞ்சுமே.

(ப. இ.) வாய் (புருவநடு), மிடறு, நெஞ்சு, உந்தி (மேல்வயிறு), இலிங்கம் (கொப்பூழ்), மேலாகிய மூலம் ஆகிய ஆறு நிலைக்களமும் இடமாக அகரம் தோன்றும். மூக்கு நுனியாகிய தூயதோர் துண்டத்தினின்று பெருமைமிக்க உச்சித் தொளையாகிய கபாலம் வரை அவ் வொலி பரந்து செல்லும். பின் வெளிப்போதரும். வெளிப் போதருமென்பது எழுத்து வடிவாய்த் தன் செவிக்கும் பிறர் செவிக்கும் புலனாகும் செவியோசை யாகும் என்பதாம். இவ் ஈறாகிய வலிமையுள்ள செவியோசைக்கு உயிராக நிற்பது செந்தமிழ்த் திருவெழுத்தைந்தாகும்.

(அ. சி.) மூலம் - இலிங்கம் - உந்தி - இதயம் - கண்டம் - துண்டம் என ஆதாரங்கள் ஆறு கூறப்பட்டது காண்க. மத்தகம் செல்லலாய தீறாம்-நாதவடிவமான அக்கரம் மூலத்திற் றோன்றிச் சென்று சகசிர அறையிற்றாக்கி வர்ணவடிவாய் வெளிப்படும் என்பது. ஐந்து - வாய், கண்டம், இதயம், உந்தி - இலிங்கம்.

(4)

2653. கிரணங்கள் ஏழுங் கிளர்ந்தெரி பொங்கிக்
கரணங்கள் விட்டுயிர் தானெழும் போதும்
மரணங்கை வைத்துயிர் மாற்றிடும் போதும்
அரணங்கை கூட்டுவ தஞ்செழுத் 1தாமே.

(ப. இ.) ஊதா, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு, இளநீலம் என்னும் ஏழுநிறக் கதிர்கள் சேர்ந்த நிலையில் எரியொளி யுண்டாகும். அவ் வெரி மிகுதிப்பட்டு நின்றபோது கருவிக்கூட்டங்களினின்றும் ஆருயிர் எழுந்து புறம் செல்லும். அவ் வுயிர் இறப்பினை மேற்கொண்டு உடம்பினைவிட்டு அகலும். அப்பொழுது அவ் வுயிர்க்கு என்றும் பொன்றா அரணப் புகலிடமாக விருப்பது சிவபெருமானின் திருவடி. அத் திருவடியினை ஒருவாது மருவுவிப்பது திருவைந்தெழுத்தாகும்.

(அ. சி.) கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி - ஒளி ஏழு கிரணங்களால் ஆக்கப்பட்டதால் ஏழும் கிளர்ந்து எரி என்றார். ஏழு கிரணங்களாவன: ஊதா, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு, இளநீலம். மரணம் - யமன். அரணம்-உயிர்க்கு அரண் ஆகிய முத்தி.

(5)

2654. ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திர2 மாரும் அறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும்
வாயுறு வோதி வழுத்தலு மாகுமே.


1. சரண. அப்பர், 5. 97 - 17.

" வரையார், " 6. 42 - 3.

2. மந்திர. சம்பந்தர், 3. 22 - 2.