23. மாகேசுரர் நிந்தை 520. ஆண்டான் அடியவ ரார்க்கும் விரோதிகள் ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர் ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர் தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே. (ப. இ.) சிவனடியார்கள் மலப்பிணிப்புடைய மற்றையவர்கட்குப் பெரும் பகைவராவர். அவர்கள் பிச்சையெடுத்துண்பது தெருவிலும் ஊரிலுமன்று. தம் வீட்டிலேயே தாம் உழைத்த உழைப்பினையே உடையவன் உடைமை என்னும் உண்மை யுணர்ந்தவராதலால் அவ்வுடையவன் திருமுன் வைத்து முதற்கண் அவனுக்குக் குழைத்துப் பின்பு தாம் அதனை அவன்பால் பிச்சையாக ஏற்று உண்பர். இதுவே அவர் கொள்ளும் பிச்சையாகும். நாம் அமைத்த படைப்பமுதாயினும் அது கடவுட்டிருப் பெயரால் வழங்கப்படுவதூஉம் காண்க. இஃது, 'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து, கெடுக உலகியற்றி யான்' (1062) என்னும் திருக்குறளுக்கு மாறானதன்று. உடையான் - சிவபெருமான். அத்தகைய சிவனடியாரை ஏனை ஆன்றோரும் பொறுக்க முடியாத தீச்சொற்களைச் சொல்லித் துன்புறுத்த முயன்றோர் அவர்தம் தீவினையால் நரகத்தழுந்துவர். ஆர்க்கும் - கட்டும்; மலம். விரோதிகள் - எதிர்த்துச் செல்லும் தவத்தினர். (ஆர்க்கும் காரிய ஆகுபெயராக மலத்தினைக் குறிக்கும்.) ஐயமேற்று உண்பவர் - உண்ணும் உணவினை இறைவன் உடைமை எனக் கருதித் திருவடியை மறவா நினைவுடன் உண்பவர். ஐ - இறைவன். தாந்தாம் - தாமே செய்து கொண்ட தீவினையால். தாழ்நரகு - நீங்காப் பெருந்துன்ப இருளிடம். குழைத்தல் - நைவேதித்தல். (1) 521. ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே ஞானியை வந்திப் பவனுமெய் நல்வினை யான கொடுவினை தீர்வா ரவன்வயம் போன பொழுதே புகுஞ்சிவ போகமே. (ப. இ.) திருவடியுணர்வு பெற்ற சிவஞானியாகிய சிவனடியார்களை அறிந்தோ அறியாமலோ நிந்திப்பதாகிய வசைகூறுவோர் நல்வினைப்பகுதியினின்றும் நீங்கித் துன்புறுவர். வந்தித்தலாகிய இசை கூறுவோர் தீவினைப் பகுதியினின்றும் நீங்கி இன்புறுவர். நம்மைச் சிவனடியார்களுக்கு முற்றாக ஒப்புவித்து நின்ற அப்பொழுதே திருவடியின்பத்தை நாம் எய்துவம். மெய்ப்பொருள் நாயனாரும் ஏனாதிநாத நாயனாரும் பொய்க் கோலத்தையே மெய்யெனக் கொண்டு தம்மை அவர்கள்பால் ஒப்புவித்து அப்பொழுதே திருவடிப்பேறு பெற்றமை இதற்கொப்பாகும். தீர்வர் - ஞானியை நிந்திப்பவர் நல்வினையினின்றும் தங்குவர். வந்திப்பவர் தீவினையினின்றும் நீங்குவர். (2)
1. ஆயசெயல். 12. கணம்புல்லர், 5.
|