(அ. சி.) சோதனை செய்து - அத்துவா சோதனை செய்து. இது நிர்வாண தீக்கையில் செய்யக்கூடியது. (2) 1400. கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர் கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள் கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங் கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.1 (ப. இ.) நாவலந்தீவு முதலிய நிலவுலகங்கள் ஒன்பது பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வொன்பது கண்டங்களையும் இறையுறை திருப்பதிகளாகக் கண்டு வழிபட்டு வலஞ்செய்து வந்தவர், அங்ஙனம் விளங்கும் சிவபெருமானின் அருவம் நான்கு, உருவம் நான்கு, அருவுருவம் ஒன்று ஆகிய ஒன்பது திருமேனிகளையும் கண்டவராவர். இவர்களே வேறுபட்ட பல அண்டங்களையும் அருட்காட்சியால் கண்டவராவர். இவர்கள் கடுஞ்சுத்த சைவர் என அழைக்கப்படுவர். கடுஞ்சுத்த சைவர்: நிலைபேறான உண்மைச் சித்தாந்த சைவர். இச் சிறப்பினரையே அசுத்த சைவர் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. அ: ஈண்டுத் தலைமை அழகு முதலிய சிறப்புப் பொருளுணர்த்தும். (அ. சி.) கண்டங்கள் ஒன்பது - இப் பூமி. அண்டத்தின் பாகங்கள் ஒன்பது. கண்டு ஆய் - பார்த்து ஆராய்ந்த. (3) 1401. ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன் மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும் ஏனை நிலமும் ஏழுதா மறையீறுங் கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே. (ப. இ.) திருவடியுணர்வு கைவந்த ஞானியர் ஏழுலகங்களிலும் நிலவும் நல்ல நூற்களுடன் வாய்வாளாநிலையும் எய்துவர்; அறுபத்து நான்கு கலைகளும், அவற்றால் ஏற்படும் அறுபத்துநான்கு பேறுகளும் பெறுவர். இவ்வுலகம் நீங்கிய ஏனை உலகங்களும், உணர்விலுணர்த்தும் எழுதாமறைமுடிவும் காண்பர். யாவர்க்கும் முதல்வனாம் சிவபெருமானையும் யாண்டும் அடிமையாம் தன்மை வாய்ந்த தம்மையும் மாசறக்காணும் வாய்மையராவர். மோனதிசை - மவுனநிலை வாய்வாளாமை. சித்தி - பேறு. வாள் - சொல். வாய்வாளாமை. சொல்லாடாமை எழுதாமறை: ஓசை; நாதம். (அ. சி.) புவியெழு நன்னூல் - பூமியின்கண் தோன்றிய நல்ல நூல்கள். மோன திசை - மவுன நிலை. ஏனை நிலம் - ஏனைய அண்டங்கள். எழுதா மறை - எழுதப்பட்ட வேதங்கள். (எழுதா செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்). கோன் - சிவம் தன்னை - ஆன்மாவை. (4)
1. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 2.
|