563
 

வேண்டும் கருவிகளோடு கூடிச் செய்யும் யோகமும் கைகூடும். அதனாற் காணப்பெறும் வழிதொறும் பற்றுக்கோடின்றிச் சென்று புருவநடுவாம் திங்கள்மண்டிலத்துத் தோன்றும் புத்தமிழ்தங் காண்பர். கண்டு திருவருளால் மலமாயா கன்மங்களாகிய தளையினை யறுத்து நிலைநிற்பர். அங்ஙனம் நின்றார்க்கு விட்டு நீங்காது விளங்குவது சிவனார் அருட்சுடரேயாகும். அச் சுடர் ஓண்சுடர் எனப்படும்; இது பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அம்மொழித் தொகையாகும்.

(அ. சி.) ஏனம் - சாதனக் கருவி, ஆதாரயோகம். வழி - ஆதார மார்க்கம். கூன.....கண்டு - சந்திர மண்டலத்துப் பெருகும் அமுதம். ஊனமறுத்து - மலம் ஒழித்து. ஒண்சுடர் - சிவம்.

(6)

1446. ஞானிக் குடன்குண ஞானத்தில் நான்குமா
மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து
மேனிற்ற லாஞ்சத்தி வித்தை விளைத்திடுந்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே.

(ப. இ.) சிவஞானிக்குரிய பண்பு நான்காகும். அவை, அறிவிற் சீலம், அறிவில் நோன்பு, அறிவிற்செறிவு, அறிவில் அறிவு என்பன. ஞானத்தின் மேனிலையாகிய மோனத்தை எய்தியவர்க்கு மேற்கூறிய நாற்படிகளுள் ஏதும் பொருந்தா. சிவசத்தியில் தன்னை மறந்து நிற்க, அஃது அப்பால் நிலையிலுள்ள குண்டலினிசத்தியின் வலிகொண்டியற்றும் யோகப்பயனை விளைத்திடும். இவையே பற்றுக்கோட்டோடும் செய்யும் யோகியர்க்கு நிகழும் அறிவிற்சீலம், அறிவில் நோன்பு எனப்படும். இவை ஞானத்திற்சரியை ஞானத்திற் கிரியை எனப்படும்.

(அ. சி.) ஞானத்தில் நான்கு - ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம். முன் மோகித்து - சிவ சன்னிதியில் தன்னை மறந்து. சத்திவித்தை - குண்டலி யோகம். தானிக் குலத்தோர் - ஆதார யோகிகள்.

(7)

1447. ஞானத்தின் ஞானாதி நான்குமா ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல்
ஞானத்தின் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.1

(ப. இ.) சிவஞானிக்கு ஓதப்பட்ட அறிவில் அறிவு முதலிய நான்கும் உள்ளன. அறிவில் அறிவாகிய ஞானத்தின் ஞானமே யான் எனதென்னும் செருக்கறல். ஞானத்தில் யோகம் முப்பத்தாறு மெய்யுங் கடந்த அருள்வெளியில் காணும் சிவ ஒளி. ஞானத்தில் கிரியையே திருவடிப்பேற்றினை நாடுதல். மெய் - தத்துவம். ஞானத்தில் சரியை என்பது திருவடிப்பேற்றினைத் திருமுறைச் செல்வர் நவில நன்கினிது கேட்டல்.

(8)


1. ஞானநூல்தனை. சிவஞானசித்தியார், 8. 2 - 13.

" ஞானயோ. சிவஞானசித்தியார், 12. 3 - 3.