564
 

1448. நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயங் கரைஞானங் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.

(ப. இ.) பொருந்திய சிவஞானத்தின் நாற்படியும் மேற்கொண்டவன், பிறப்புக்கு வித்தாம் இருள்சேர் இருவினையும் கடந்தோனாவன். இருவினை நான் என்னும் முனைப்பாற்செய்யும் புண்ணிய பாவம். கருதப்படுகின்ற பிழம்போடு கூடித்தோன்றி அருளும் திருவுருவில் மறைந்திருக்கும் அன்பின் விளை ஞானச் சிவப்பொருளை அவ்வுருக்கரைந்த நிலையிற் காண்பவனும் அவனேயாவன். அவனே நிலைபேறான தூயோன். அவனே சிவப்பேற்றினன். அவனே திருவடி எய்திய சித்தன்.

(9)

1449. ஞானச் சமயமே நாடுந் தனைக்காண்டன்
ஞான விசேடமே நாடு பரோதயம்
ஞானநிர் வாணமே நன்றறி வானருள்
ஞானாபி டேகமே நற்குரு பாதமே.

(ப. இ.) சிவஞானத்தின் நிகழும் நால்வகைத் தீக்கையும் வருமாறு: சிவ நுழைவெண்பது சிவனைக்காணுமுறையால் தன்னைக் காண்பது. சிவநோன்மையென்பது மேலாம் சிவத்தோற்றம் காண்பது. சிவ நுண்மை என்பது வாலறிவினனாகிய சிவபெருமானின் திருவருள் விழ்ச்சி. சிவ நுகர்மை என்பது திருவருளாசான் திருவடியினை மறவாமை. நுழைவு - சமயம், நோன்மை - விசேடம். நுண்மை நிருவாணம். நுகர்மை - அபிடேகம். திருவருள் வீழ்ச்சி - சத்தி நிபாதம், நிபாதம் - நன்றாய்ப் பதிதல்.

(அ. சி.) பரோதயம் - பரம் + உதயம்; சிவம் தோன்றல். நன்றறிவான் அருள் - சிவனருள். நற்குரு - சிவகுரு.

(10)


9. சன்மார்க்கம்
(காதன்மை நெறி)

1450. சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத்
தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.

(ப. இ.) நல்லாரால் புகழ்ந்து சொல்லப்பெறும் தூமாயை மெய்கள் ஐந்து. அவை, ஆசான், ஆண்டான், அருளோன், அன்னை, அத்தன் என்பன. இவற்றை முறையே சுத்தவித்தை, ஈசுரம், சதாசிவம், சத்தி, சிவம் எனவும் கூறுப. செந்தமிழ்த் திருமறையும் திருமுறையும் (தமிழ் வேதாகமங்கள்) கூறம் சிவபெருமானின் உண்மைத் தன்மை