639
 

யாம் பேதைகளே! பிறப்பின் பயன் இதுவோ? சிவனார் திருவுருவினைக் கண்டவுடன் மெய்ம்மறந்து ஆடியும், பொய்யில் திருமுறை பாடியும், இன்பக் கண்ணீர் பெருக்கி அழுதும், மகிழ்ச்சி மேலீட்டால் அரற்றியும் இம்முறையாகத் தேடியுங் காணுங்கள். இதுவே பிறவிப்பயன்.

(அ. சி.) வேடங்கள் கொண்டு - பொய்யாகத் தவசி வேடம் பூண்டு. வெருட்டிடும் - மயக்கும்.

(1)

1628. ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
மான நலங்கெடும் 1அப்புவி யாதலால்
ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே.

(ப. இ.) திருவடியுணர்வில்லாக் கீழோர் சிவக்கோலம் பூண்டு சிறந்த தென்னாட்டகத்துக் கூடா ஒழுக்கம் புரிந்து பிறரை வஞ்சித்து ஏதும் உழையாது இரந்துண்டிருப்பர். அவர் அவ்வாறு இருப்பதால் நாட்டின் பெருமையும் நன்மையும் கெட்டொழியும். ஆகையால் அப் பொருந்தா வேடத்தாரை அவ் வேடத்தை நீக்கச்செய்து நாட்டுக்கு நன்மையும் இன்பமும் வாய்க்கும்படி செய்வது நல்லோர் கடனாகும். மானம் - பெருமை.

(அ. சி.) இருப்பினும் - சுகமாக இருந்தபோதிலும். ஆன நலம் - உண்மை வேடத்தால் ஆன நன்மை. கழிப்பித்தல் - நீக்கல்.

(2)

1629. இன்பமுந் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள
நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடோறும் நாட்டினின்
மன்பதை செப்பஞ் செயின்வையம் வாழுமே.3

(ப. இ.) நாட்டவர் செய்யும் நன்செயலாகிய புண்ணியத்தால் இன்பமும், புன்செயலாகிய பாவத்தால் துன்பமும் நாட்டில் நிலைத்து நிற்கும். ஆகவே உலகாளும் வேந்தன் பொய் வேடங் கொண்டார்தம் இழிசெயலால் நாட்டிற்குத் துன்பம் உண்டாவதைக் கருதி ஒவ்வொரு நாளும் அப் பொய்வேடத்தாரை நாட்டினின்றும் அகற்றி மன்பதைகளைச் செம்மையாக வாழும் நெறியில் செலுத்தினால் அவர்கள் நன்கு வாழ்வர். இக்குறிப்பினையே திருவள்ளுவநாயனார், 'ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே, வேந்தமைவில்லாத நாடு' (740) என்றருளிச் செய்தனர்.

(அ. சி.) இறை - அரசன். நாடி - உண்மைத் தவசிகள் இன்னார் என்றும் பொய்த் தவசிகள் இன்னார் என்றும் ஆராய்ந்து பார்த்து.

(3)


1. வசையிலா. திருக்குறள், 239.

2. நாடோறு. " 520.

" நாடொறும். " 553.

" பெருமைக்கும். " 505.