644
 

(ப. இ.) அத் திருவெண்ணீறானது அரசு, ஆல், அத்தி ஆகிய மூன்றின் சுள்ளிகள் சிவபெருமான் வீற்றிருந்தருளும் எட்டுத் திரு வுருவங்களின் ஒன்றாகிய சிவவேள்வித் தீயின்கண் ஒளிவிட்டெரிந்து உருமாறிக் காரியமாகக் காணப்படுவது. உருவம், அருவம், உருவருவம் என்னும் மூன்று நிலையும் கடந்த சிவபெருமான் திருவடியினைத் தலைக் கொண்ட மெய்யடியார் திருவுருவம் திருநீற்றுத் திருவுருவமாகும். அவர்களே திருமுறையுணர்ந்த திருவடிச் செல்வத்தராவர். அவர்களே மெய்ப்பொருளையடையும் உயர்குலத்தினராவர். 'இட்டார் பெரியோர்' என்பது திருநீறு இட்டார் பெரியோரென்பதே 'இடாதார் இழிகுலத்தோர்' என்பது திருநீறு இடாதார் இழிகுலத்தோர் என்பதே. இவையன்றி மக்களில் சாதி என்றும் உயர்வு தாழ்வு என்றுங் கூறுவது தமிழக மரபன்று. காரம் காரியம்; திருநீறு.

(அ. சி.) விரவு கனலில் வியன் உரு மாறி, அரசு....அக்காரம் விபூதியானது சிவாக்கினி காரியத்தில் அரசு, ஆல், அத்தி முதலிய சமித்துக்கள் எரிக்கப்பட்டு நீறு ஆக்கப்படுவதாலும் உண்டாகும் (இது ஒருமுறை). நிரவயன் - வடிவமற்ற சிவன். நீதர் - நீதியை உடையவர். பிரமன் உயர் குலம் - பிரமனால் படைக்கப்பட்ட மனிதர்களில் உயர்ந்த ஒழுக்கத்தை உடையவர் ஆவர். "மேதினியில் இட்டார் உயர்ந்தோர் இடாதார் இழிகுலத்தோர், பட்டாங்கில் உள்ளபடி" என்ற ஒளவையார் வாக்கை நோக்குக. இழிகுலம் என்றும் உயர்குலம் என்றும் திருமூலர் கூறியது சாதி அல்ல. ஒழுக்கத்தில், அறநெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் ஆவார். "பட்டாங்கில் உள்ளபடி" என்றது வேதாகமங்களில் கூறியபடி என ஒளவையாரும் எடுத்துக் காட்டியுள்ளார்.

(3)


11. ஞானவேடம்

1640. ஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தர்
ஞானமுள் ளார்வேடம் இன்றெனில் நன்முத்தர்
ஞான முளதாக வேண்டுவோர் நக்கன்பால்
ஞான முளவேட நண்ணிநிற் பாரே.

(ப. இ.) திருவடியுணர்வாகிய சிவஞானம் கைவரப்பெறாதார் வேடம் பூண்டு பழிப்புக்கு ஆளாகி நரகத்திலாழ்வர். திருவடியுணர்வு கைவந்தோர் கோலமுள்ளாரெனினும் இலரெனினும் நல்ல வீடுபேற்றினை எய்துவர். மிக்க மகிழ்ச்சியை உண்டாக்குவோனாகிய நக்கன் சிவபெருமானிடத்து மெய்யுணர்வுகொள்ள விரும்புவோர் ஞானவேடத்தினைப் பொருந்திநிற்பர். நகுதல் - மகிழ்தல். ஞானவேடம் என்பது, 'ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும் நம்ச்சிவாயச் சொலாம்' என்று ஆளுடைய பிள்ளையார் அருளுமாற்றால் ஓவாது திருவைந்தெழுத்தினை உள்ளன்புடன் ஓதி ஒழுகுதல்.

(அ. சி.) நரகத்தர் - நரக புவனங்களை அடைந்து துன்புறுவர். இன்றெனின் - இன்றெனினும் - (உம் தொக்கி வந்துள்ளது) இல்லாமலிருந்தாலும். நக்கன்பால் - சிவனிடத்தில்.

(1)