2094. உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன கண்டு விடுஞ்சூக்கங் காரண மாச்செலப் பண்டு தொடரப் பரகாய யோகிபோற் பிண்டம் எடுக்கும் பிறப்பிறப் 1பெய்தியே. (ப. இ.) ஆருயிர் இருவினைப்பயனைத் தூய்ப்பதன் பொருட்டுத் 'துறக்கப்படாத உடலைத் துறந்து வெந்தூ துவரோடு இறக்கும்'. இறந்தால் இருவிசும்பு ஊறும். இருவிசும்பு - நரகசுவர்க்கம். நரகம் - துன்பவுலகு. சுவர்க்கம் - இன்பவுலகு. எறி ஆங்குள்ள இருவினைப்பயனையும் கண்டு உண்ணும். கண்டு உண்ணுதல்: அறிந்து நுகர்தல். அங்கெல்லாம் நுண்ணுடல் வாயிலாகச் செல்லும். ஆங்குள்ள நுகர்வுமுடிந்ததும் வேற்றுடம்பிற்புகும் அகத்தவத்தர்போல் ஏறிவந்து பிறக்கும். பிறந்தால் பிறப்பு இறப்பு உற்றுத்தடுமாறும். (அ. சி.) உண்டு - அநுபவித்து. கண்டு - அறிந்து. சூக்கம் காரணமாக சூக்கும தேவ வாயிலாக. பண்டு - பழைய வினை. பிண்டம் - சரீரம். (12) 2095. தானவ னாகிய தற்பரந் 2தாங்கினோன் ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும் ஏனை யுயிர்வினைக் கெய்து மிடஞ்சென்றும் வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே. (ப. இ.) சிவமே நினைந்து சிவமாம் பெருந்திருப்பெற்ற சிவகுரு 'தானவனாகிய தற்பரந்தாங்கினோனாவன்' அவன் செவ்வுயிர்க்குப் பிறப்பிற்கு வாயில்களான ஆணவ கன்மமாயைகளை அறவே அகற்றிச் சிவபெருமான் திருவடிக்கீழ் அடைந்து இன்புறுமாறு துணைபுரிந்து வேண்டுவன செய்தருள்வன். அவ்வுயிர் சிறப்பெய்திப் பேரின்பம் இம்மையே பெற்று வாழும் அவ்வுயிரே சிறப்புயிராகும். அச் செவ்வி வாயாத பிறப்புயிர் செய்வினைப்பயனைத் துய்ப்பதற்கு இடமாகிய வான்சென்று துய்த்தும், பின் நிலவுலகத்தே வந்து பிறந்தும் வருந்தும். செவ்வுயிர் சிறப்புயிர் சேராப் பிறப்புயிர், இவ்வுலகில் வந்துபோம் எண். செவ்வுயிர் - பரி பக்குவம்எய்திய வுயிர். சிறப்புயிர் - இம்மையே அம்மை எய்திய செம்மையுயிர். இவ்வுயிரையே சீவன் முத்தன் என்ப. பேறெய்தும் நன்னெறியிற் புகாது பிறந்து இறந்து தடுமாறும் உயிர் பிறப்புயிர். (அ. சி.) தாங்கினோன் - அதிகாரி, புருடன், ஆனவை - ஆணவ முதலியவற்றை பரமத்து - முத்தியில், வினைக்கு - புண்ணிய பாவத்துக்குத் தக்கவாறு. (13) 2096. ஞானிக்குக் காயஞ் சிவமே தனுவாமஞ் ஞானிக்குக் காயம் உடம்பே யதுவாகும் மேனிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும் மோனிக்குக் காயமுப் பாழ்கெட்ட 3முத்தியே.
1. இந்நிரையி. சிவப்பிரகாசம், பொது - 34. 2. அவனேதானே. சிவஞானபோதம், 10. 3. சன்மார்க்கம். சிவஞானசித்தியார், 8. 2 - 12.
|