(ப. இ.) முப்பத்தாறு மெய்களின் உண்மை உணரும் உணர்வுதலைப் பட்டவர்கட்கே திருவடியுணர்வாகிய அழியாத் தத்துவஞானம் கைகூடும். அத் திருவடியுணர்வு கைவந்தால் சிவனருளால் உயிரி சிவனாவன். சிவனாகவே திருவடிக்கீழ் அமர்ந்து திருவடியின்பந் துய்ப்பன். (27) 2292. தன்னை யறிந்து சிவனுடன் தானாக மன்ன மலங்குணம் மாளும் பிறப்பறும் பின்னது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே. (ப. இ.) திருவருளால் ஒருவன் தன் உண்மை நிலையினை அறிந்து அச் சிவபெருமான் திருவடிக்கீழ்த் தங்கி நிலைப்பன். தங்கவே மலம் முதலியவற்றின் பிணிப்பு மறைப்பு துய்ப்பு முதலிய பண்புகள் அறும். அறவே பிறப்பும் அறும். அற்றபின் கைகூடுவது உண்மைத் திருவடிப் பேறாகும். அப் பேற்றால் நன்னெறிப்பேரொளி நண்ணும். நண்ணவே என்றும் நன்மை பயப்பதாகிய திருவடியுணர்வுப்பொறி பெற்ற திருவினராவர். அத் திருவினையே 'வாராத செல்வ' மெனவும், 'செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே' எனவும் செந்தமிழ்த் திருமறை அருள்வதாகும். பொறி - முத்திரை. (28) 2293. ஞானந்தன் மேனி கிரியை நடுவங்கந் தானுறும் இச்சை உயிராகத் தற்பரன் மேனிகொண் டைங்கரு மத்துவித் தாதலான் மோனிகள் ஞானத்து முத்திரைபெற் 1றார்களே. (ப. இ.) சிவபெருமான் ஆருயிர்களை ஆட்கொள்ளவேண்டித் திருவருளாகிய பேரறிவே திருமேனியாகக் கொண்டருள்வன். இவ் வுண்மை 'சத்திதன் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்' என்பதனால் பெறப்படும். திருமேனியிற் காணும் திருவுறுப்புக்கள் திருவருளாற்றலாகும். உயிர்ப்புத் திருவருள் விழைவாகும். இவற்றால் தானே முழுமுதலாம் சிவபெருமான் திருவுருக்கொண்டருளினன். அதனால் படைத்தல் காத்தல் துடைத்தல் மறைத்தல் அருளல் என்னும் திருத்தொழில் ஐந்தும் புரிவானாயினன். அவனே ஐந்தொழிலுக்கும் முழுமுதல்வனாவன் மோனமாகிய முதன்மை நிலையிலுள்ள நல்லார் திருவடிப்பொறியாம் சிறப்புப் பெற்றுய்ந்தார். (அ. சி.) ஐங்கருமம் - பூத சுத்தி முதலிய ஐந்து சுத்தி, இது விசேட தீக்கை பெற்றுச் சிவபூசை கைக்கொண்டவர் செய்யும் சுத்திகள். ஞானத்து முத்திரை - சின் முத்திரை. (29) 2294. உயிர்க்கறி வுண்மை யுயிரிச்சை மானம் உயிர்க்குக் கிரியை யுயிர்மாயை சூக்கம் உயிர்க்கிவை யூட்டுவோன் ஊட்டு மவனே உயிர்ச்செய லன்றியவ் வுள்ளத்து 2ளானே.
1. கந்தமலர். சிவப்பிரகாசம், 17. " உருவருள். சிவஞானசித்தியார், 1, 2 - 19. ஈன்றாளு. அப்பர், 4, 95 - 1.
|