1580. ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும் ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும் ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர் ஆயத்தின் நின்ற அறிவறி வாறே. (ப. இ.) திருவருள் துணையால் ஞேயமாகிய திருவடிப்பேற்றில் உறைந்து நின்றோர்க்கு, முற்றுணர்வாகிய சிவஞான முதலியன நிலை பெறும். திருவடியுணர்வாம் திருவருள், அம் முற்றுணர்வு நல்கும் வீடாகிய சிவபெருமானுடன் பிரிப்பின்றி நிற்கும். அத்தகைய திருவருட் போற்றல் திருவடியைச் சார்வர். அவரே ஆயமாகிய சிவனடியார் திருக்கூட்டத்துடன் இணங்கித் தொண்டுபுரிவர். அதுவே ஆண்டவனை அடையும் நன்னெறியினைப்பற்றி வாழும் அறிவினை நல்கும் வாயிலினைப் பயப்பதாகும் அவ் வறிவுடையவரே சிறந்த நிறைந்த அறிவராவர். (அ. சி.) ஞேயத்தே நின்றோர்க்கு - மெய்ப்பொருளை ஆராய்வோர்க்கு. ஞேயத்தின்....வீடாகும் - மெய்ப்பொருளை அறிந்த ஆன்மாவின் அறிவே முத்தியைப் பயக்க உதவியாகும். ஞேயத்தின்.... ஞேயத்தை - சத்தியையும் சிவத்தையும். ஆயத்தினின்ற - சிவமான தன்மையின். (2) 1581. தானென் றவனென் றிரண்டாகுந் தத்துவந் தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு தானென்ற பூவை 1யவனடி சாத்தினால் நானென் றவனென்கை நல்லதொன் றனறே. (ப. இ.) இருவகை அறிவுப்பொருள்களுள் பேரறிவுப் பொருளாகிய அவன் என்றும், சிற்றறிவுப் பொருளாகிய தானென்றும் விதந்து மொழியப்படும் உண்மைப் பொருள்கள் இருவேறு வகையினவாம். பேரறிவென்பது தானே விளங்கும் தன்மைவாய்ந்த இயற்கை அறிவு; சிற்றறிவென்பது பேரறிவு, உடன் கலந்து விளக்க விளங்கும் தன்மை வாய்ந்த இயற்கை அறிவு. அவன் - சிவன். தான் - ஆருயிர். தான் அவன் என்னும் இவ் விரு நிலைமையினையும் ஆருயிர் அருட்டுணையால் தம் முணர்வில் காண்பதாகும். அங்ஙனம் கண்டபின் ஆருயிர் தன்னை ஒரு பூவாம் நிலைமைக்குக் கொண்டுவந்து அப் பூவை அவன் திருவடியில் சாத்தும். அங்ஙனம் சாத்தினால் நானென்றும் அவன் என்றும் வேற்றுமையுறக் கூறாது மலர்க் கூந்தல் என ஒற்றுமையுறக் கூறுவது போல் உடையான் அடிமை என ஒருமையுறக் கூறுவர். அதுவே நன்னெறி நான்மையின் நன்மையாகும். அடிமை என்னும் ஒரு சொல்லே இரு பொருள் புணர்ப்பினை உணர்த்தும் எழிலுடையதாகும், மாணவன் என்பது போன்று. (அ. சி.) தத்துவம் - உண்மைப் பொருள். இரண்டும் தனிற்கண்டு சிவத்தைச் சீவனிற் கண்டு. தானென்ற பூவை - ஆன்மாவை. நானென்று அவனென்கை-சிவன் சீவன் என்று பிரித்துக் கூறல். (3)
1. தம்மிற். திருக்களிற்றுப்படியார், 44.
|