அருமை. அதனால் தீவினையாளர் 'சிவசிவ' என்று ஓதுகின்றிலர். அத் தீவினை வேறொன்றானும் மாளாது. 'சிவசிவ' என்று இடையறாது ஓதுவதனால் மட்டுமே அத் தீவினை மாளும். 'சிவசிவ' என்று அம்மெய்யன்பர் இடையறாது ஓதிவரச் சிவவுலகச் செல்வராந் தேவராவர். 'சிவசிவ' என்று மேலும் ஓதச் சிவநிலை எய்தித் திருவடியின்பந் துய்ப்பர். பண்டை நற்றவத்தால் 'சிவசிவ' என்று ஓதும் சிவனெறியிற்சேரார் தீவினையாளராவர். அதனை ஓதும் சீவநிலையினர்க்குத் தீவினை வெற்பிற்றோன்றிய வெங்கதிர் கண்டவப், புற்பனிக் கெடுமாறுபோற் கெடும். மேலும் ஓதும் மெய்யன்பர்கள் நோன்பு நிலையினராவர். அவர் சிவவுருவினை வழிபடும் தேவராவர். பின்னும் ஓதுவோர் (2460) செறிவு நிலையினராவர். அவர்கள் சிவகதியாகிய திருவுரு எய்துவர். மேலும், 'இத்திருப்பாட்டை ஈராறுமுறை ஏத்திவரின், ஒத்தவுரு நூற்றெட்டாம் ஓர்.' என்பதனால் திருமுறை பன்னிரண்டின் நினைவாய் இதனைப் பன்னிரண்டுமுறை நாளும் அனைவரும் ஓதுக. ஓதவே நூற்றெட்டுச் சிவம் செய்ததாகும். (9) 2668. நமவென்னு நாமத்தை நாவில் ஒடுக்கிச் சிவமென்னு நாமத்தைச் சிந்தையு ளேற்றப் பவமது தீரும் பரிசும தற்றால் அவமதி தீரும் அறும்பிறப் 1பன்றோ. (ப. இ.) 'சிவயநம' என்னும் செந்தமிழ்த் திருமறையினை ஓதுமுறை ஒருபுடையொப்பாகச் சிவ என்னும் இரண்டு எழுத்தினையும் சிந்தையினுள்ளே அழுத்தமாகப் பதித்தல்வேண்டும். ய என்னும் ஓரெழுத்தினை மிடற்றின்கண் நிறுத்துதல்வேண்டும். நம என்னும் இரண்டு எழுத்தினையும் நாவின்கண் அடங்கி ஒடுங்குமாறு ஒடுக்குதல் வேண்டும். அங்ஙனம் மூவிடப் பயில்வாய் முறைமுறை ஓதுதல் ஓதுமுறையாகும். அங்ஙனம் ஓதிவர இருவினைப் பாவம் மருவாதகலும். இருவினையாவது எஞ்சுவினை ஏறுவினை என்னும் இரண்டுமேயாம். அம் மறையின் மெய்ம்மைத் தன்மையும் அதுவேயாம். அதனால் அறியாமையிருளும் தீரும். அறியாமை நீங்கவே அப்பொழுதே பிறப்பறும். பிறப்பறவே சிறப்புறும். (அ. சி.) அவமதி - அஞ்ஞானம். (10)
7. அதிசூக்கும பஞ்சாக்கரம் (மீநுண்மைஐந்தெழுத்து) 2669. சிவயா நமவெனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே யடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ வென்றென்றே சிந்தை அவாயங் கெடநிற்க ஆனந்த 2மாமே.
1. ஊனக்கண். சிவஞானபோதம், 9. 2. சிவாய. ஒளவையார், நல்வழி - 15.
|