16. நடுவுநிலைமை 307. நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை1 நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை நடுவுநின் றார்நல்ல தேவரு மாவர் நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே. (ப. இ.) அடியார் நடுவுள் இருத்தலே நடுவுநிலையாகும். நடுவுள் இருத்தல் என்பது அடியார் நிறையுடைக் காவலில் நாம் என்றும் முறையுற நிற்கின்றோம் என்னும் மறவா நினைவுடன் ஒழுகுதல். இஃது உய்யும் மெய்யடியார்க்கு வேண்டும் செய்கையாகும். வேந்தர் முதலாயினார் நடுவுள் நிற்பதென்பது அறமுறையின் காவலில் அவர்கள் நிற்பதாக நினைப்பதாகும். அடியார் நடுவுள் நின்றாலன்றித் திருவடியுணர்வாகிய சிவஞானம் எய்துதல் இல்லை. நடுவுநின்றார் நன்னெறி ஒழுகுவராதலின் அவர்கட்கு நரகம் எய்துதலும் இல்லை. நடுவு நின்றார் சிவவுலகத்து வாழும் தேவருமாவர். அந் நடுவுநின்றார் வழியே அடியேனும் நின்றேன். மேலும் திருவைந்தெழுத்தாகிய 'சிவயசிவ' என்னும் பொருண்மறையுள் ஆவியினைக் குறிக்கும் 'ய' கரம் வகர சிகரங்கட்கு நடுவாக இருக்கும் நன்மைத் தன்மையினை நாடி அம் மறையினை இடையறாது கணித்தலும் நடுவு நிற்றலாகும். இதுவே 'வாசி' யிடை நிற்கை வழக்கு என்னும் முறைமையுமாகும். இங்ஙனம் கூறுதலும் ஒன்று. (1) 308. நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன் நடுவுநின் றான்வல்ல நான்மறை யோதி நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவோர் நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே. (ப. இ.) கார்முகில் வண்ணனும் காக்குந் தன்மையால் நடுவுநின்றான் ஆவன். மறையோதியாகிய நான்முகனும் படைக்குந் தன்மையால் நடுவு நின்றவனாவன். சிவஞானிகளாவார் சிலரும் நடுவுநின்றனர். அம் முறையான் நடுவுநின்றார் நல்ல நம்பனாகிய சிவபெருமானாகித் திகழ்வர். நம்பனுமாம் - சிவமாம் பெருவாழ்வு எய்துதலுமாம். (2) 309. நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவர் நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர் நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவர் நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே. (ப. இ.) நடுவு நிற்றலாகிய சிவனினைவு உடையார் சிவஞானிகளாவர். பின் சிவவுலகக் கடவுளருமாவர். சிவவுலகம் தூமாயைக்கண் உள்ளது. மேலும் அவர் சிவனாம் பெருவாழ்வும் எய்துவர். அவருடன் கூடி இணைந்து அடியேனும் நின்றேன். (3)
1. ஊனப்பே. அப்பர், 4. 30 - 7. " உடையா, 8. கோயின்மூத்த. 1.
|