229
 

506. நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்தீக் கலந்துட் சிவனென நிற்கும்
முந்திக் கலந்தங் குலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுக மாமே.

(ப. இ.) நந்தியாகிய சிவபெருமான் செந்தீப் பிழம்பாக எழுந்தருள்வன். அவனுடன் தொன்மையிலேயே வேறன்றி நிற்கும் திருவருளாற்றல் நடப்பாற்றலாக நின்று உலகுயிர்களை வினைக்கீடாக ஆட்டும். அதுவே வனப்பாற்றலாய் நின்று நடப்பாற்றல் நிலையில் செவ்விபெறச் செய்த ஆருயிர்களைச் சிவத்துடன் கூட்டும். இதுவே வலமாகிய வெற்றியாகும். இத் திருமுகமே கீழ்நோக்கிய திருமுகமாகும். வலம்வரும் - வெற்றி கொள்ளும். அந்தி இறைவன் - அந்திபோலும் திருச்சடையினையுடைய சிவபெருமான். அதோமுகம் - திருவருளாற்றல்.

(4)

507. அதோமுகங் கீழண்ட மான புராணன்
அதோமுகத் தன்னொடும் எங்கு முயலுஞ்
சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோமுகன் ஊழித் தலைவனு மாமே.

(ப. இ.) கீழ்நோக்கிய திருமுகம் பூத்த சிறப்பினைக் கேண்மின். தொல்லோனாகிய சிவபெருமான் அத் திருமுகத்துடன் கலந்து எல்லாம் முயல்வன். மெய்யாயுள்ள ஓம் என்னும் வைப்பாற்றலின் மேன்முகம் ஒளிசேர் தூமாயையாகிய விந்து. கீழ்முகம் தூவாமாயையாகிய மோகினி. இந் நிலை தூண்டித் தொழிற்படுத்தும் கலப்பும், சிவகுருவாக எழுந்தருளும் நிலைக்களமும் குறிப்பதாகும். இத் திருமுகத்துக்குரிய முழு முதலே ஊழித்தலைவனாவன். ஓமொழி சொல்லப்படவே தூமாயையாகிய விந்துவும், தூவாமாயையாகிய மோகினியும், கீழ்மாயையாகிய மூலப்பகுதியும் பெறப்படும். புராணன் - காக்கும் பழையோன். அதோ முகத்தன் - அறுமுகன். அதோமுகன் - மாயையைக் காரியப்படுத்துபவன். ஊழித்தலைவன் - அனைத்தையும் ஒடுக்கும் தலைவன்.

(அ. சி.) சதோமுகம் - சத் ஓம் முகம்; சத்தாகிய பிரணவ சொரூபமான முகம்.

(5)

508. அதோமுக மாமல ராயது கேளும்
அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்து
அதோமுக மாகிய அந்தமில் சத்தி
அதோமுக மாகி அமர்ந்திருந் தானே.

(ப. இ.) கீழ்நோக்கிய திருமுகத்துடன் கூடி மாயாகாரியங்களைத் திருவுள்ளத்தால் தொழிற்படுத்தி அமர்ந்திருந்தனன் சிவன். அந்தமில் சத்தி - அளவில்லாத மாயையின் ஆற்றல்கள். (ஆறுகோடி மாயா சத்திகள்: செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணாவுவகை என்பன.) அமர்ந்திருந்தான் - திருவுள்ளக்குறிப்பால் இயக்கி நின்றனன். அதோமுகம் - ஆதியாற்றல்.

(6)