(ப. இ.) சிவனினைவின்றி அளவில் காலமாகிய எண்ணாயிரத்தாண்டு யோகம் இருந்தாலும் கண்ணுள் மணியும், அம் மணியுணர் அமிழ்தும் அனைய சிவபெருமானைக் கண்டறியவொண்ணாது. அகத்தே நாடி அருள் ஒளிபெற்று நோக்கினால் சிவபெருமானாகிய அழல்வண்ணன் நிழல்தரு பளிங்கொத்துக் கலந்து காட்டியும் கண்டும் இருந்தனன் என்பது புலனாகும். கண்ணாடியைப் பார்க்குங்கால் பார்க்கும் கண் தன்னையும் அக் கண்ணாடியையும் காணும். அதுபோல் ஆருயிர் பேருயிராகிய சிவபெருமானைக் காணும் வாயிலாகவே தன்னையும் காணும். 'கண்ணாடியைக் காணும் கண்ணே தனைக்காணும் பெண்ணார் தாள் காணவுயிர் பேசு' என்பதை நினைவுகூர்க. எண்ணாயிரத்தாண்டு யோகவுறுப்பு எட்டினையும் குறிக்கும் குறிப்புமாகும். கண்ணாடிபோல - கண்ணாடியில் தோன்றும் பாவைபோல (ஆடிப்பாவை - நிழலுரு) நெஞ்சத்தில் சிவனை நினைந்தால் சிவன் விளங்குவன். அவனை மறந்தால் ஆவியின் முனைப்பு விளங்கும். (6) 584. நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்டமும் இல்லை மனைக்கும்1 அழிவில்லை ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை தேட்டமும் இல்லை சிவனவ னாமே. (ப. இ.) நாட்டம் இரண்டினையும் புருவநடுவிற்கு நேராம் மூக்கு நுனியில் வைத்தல்வேண்டும். அங்ஙனம் வைத்து உயிர்ப்படக்கி அசைவறநிற்கத் திருவருள்ஒளி அகத்தே காணப்படும். ஒளி காணப்படவே உடம்புக்கு எவ்வகை வாட்டமுமில்லை. மனையாகிய உடம்பிற்கும் அழிவு ஏற்படாது. உயிர்ப்புப் புறஞ்செல்வதாகிய ஓட்டமும் இல்லை. புறப் புலன்கள்மாட்டுச் செல்லும் உணர்வுமில்லை. தன்முனைப்பில்லை. எவ்வகை வேட்கையுமில்லை. அவனே சிவனாவன். நடுமூக்கு - புருவநடுவாம் மூக்கின் நுனி. ஓட்டம் - உயிர்மூச்சின் இயக்கம். உணர்வு - உலக நாட்டம். மனை - உடல். (அ. சி.) நடுமூக்கு - புருவமத்தி. தேட்டம் - ஆராய்ச்சி. (7) 585. நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு உயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித் துயரற நாடியே தூங்கவல் லார்க்குப் பயனிது காயம் பயமில்லை தானே. (ப. இ.) நயனமாகிய நாட்டமிரண்டனையும் நடுமூக்கின்மேல் வைத்துச் சிவனை நாடுக. உயர்ந்தெழுந்து புறத்துப்போகும் உயிர்ப்பினை உள்ளே ஒடுக்குக. பிறப்புத்துன்பம் நீங்குமாறு சிவனை நீங்கா நினைவுடன் தூங்கவல்லார்க்கு அத் துன்பம் நீங்கும். அதுவே பெரும்பயன். உடம்பினுக்கும் அழிவில்லை. துயரறநாடி துயரறநின்ற நடுநாடி. தூங்கவல்லார்க்கு நிலைத்து நிற்கவல்லார்க்கு. பயமில்லை - கூற்றுவனுக்கு அஞ்சவேண்டுவதில்லை. (8)
1. உடம்பெனும். அப்பர், 4. 75 - 4. " ஊனிலு. சம்பந்தர், 3. 22 - 3.
|