(அ. சி.) கும்பத்து அமரர் - பூரணகும்பங்களை ஏந்திய அமரர். (4) பிரத்தியாகாரம் (தொகை நிலை) 616. சேருறு காலந் திசைநின்ற தேவர்கள் ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக் காருறு கண்டனை மெய்கண்ட வாறே.1 (ப. இ.) தொகைநிலையாகிய பிரத்தியாகாரவழி நிற்பார், சிவபெருமானின் திருவுருவினை எய்துவர். எய்திச் சிவவுலகம் புகுவர். புகுங்கால் எண்புலக்காவலர் இவன் யார் என்பர். மற்றுமுள்ள தேவர்கள் உண்மையுரைத்து உவப்புடன் எதிர்கொண்டு வழிபடுவர். மழைபோலும் கருத்த கண்டனை அருளால் மெய்ம்மையாக உணர்வினில் கண்ட ஒண்மைய ரிவராவர். அரனாம் - சிவபெருமான் ஆட்கொண்டருளித் தன் உருவைத் தான் கொடுத்தலால் அரன் திருவுருவாய் விளங்கினர் ஆவர். மெய்கண்டவாறு - நேரே கண்டமுறையாம். (அ. சி.) தேவர்கள் ஆர் இவர் என்ன - பிரத்தியாகாரப் பலத்தால் சிவசாரூபம் பெற்றுச் செல்லும் இவர் யார் என்று தேவர்கள் கேட்க. (5) தாரணை (பொறை நிலை) 617. நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ் சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப் பல்வழி எய்தினும் பார்வழி யாமே. (ப. இ.) பொறைநிலையாகிய தாரணைவழிச் செல்வர் நல்வழி நாடினவராவர். நமன்வழி மாற்றினவராவர். ஆருயிர்கட்கும் வேறுறு தேவர்கட்கும் வேண்டுவகொடுக்கும் அயன் அரி நிலையினருமாவர். ஏனையிமையவர்கள் பல வேறிடங்களில் உறையினும் பிறப்பு இறப்புகட்கு உட்புகுந்து பார்வழி வருபவரே யாவர். நல்வழிநாடி : நல்வழிநாட, எச்சத் திரிபு. சுருங்காப் பெருங்கொடை வழியில் ஆளர் - குறையாத பெரும் செல்வம் அருளுதலை முறைமையாகப்பெற்ற ஆசான்மெய்க்கண் வீற்றிருக்கும் அயன் அரி என்னும் ஆட்சியாளர். பல்வழி - பல இடங்கள். பார்வழியாகும் - நிலத்தில் நடப்பதாகும். (அ. சி.) சொல்வழி - நூல்கள் கூறும் தாரணை மார்க்கம். சுருங்...ஆளர் - பிரம விட்டுணுக்கள். (6)
1. சகமார்க்கம். சிவஞானசித்தியார், 8: 2 - 11. " அங்க. 12. திருமலைச் சிறப்பு, 16. " சம்பு. " " 19.
|